Ad Widget

ஆப்கானிஸ்தான் அணியை போராடி வென்ற இங்கிலாந்து

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தை தொடக்கத்தில் அச்சுறுத்திய ஆப்கானிஸ்தான் பிறகு போராடி அடங்கிப் போனது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் (குரூப்1) அணிகள் மோதின. டெல்லியில் அரங்கேறிய முதல் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இதுவாகும். இங்கிலாந்து அணியில் முதுகுவலியால் அவதிப்படும் அலெக்ஸ் ஹாலெஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜேம்ஸ் வின்சும், ரீஸ் டாப்லேவுக்கு பதிலாக பிளங்கெட்டும் சேர்க்கப்பட்டனர்.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஜாசன் ராயும், ஜேம்ஸ் வின்சும் இங்கிலாந்தின் இன்னிங்சை தொடங்கினர். கடந்த 15 ஆட்டங்களில் இங்கிலாந்தின் தொடக்க ஜோடி ஒரு முறை கூட 50 ரன்களை தாண்டவில்லை. இந்த ஆட்டத்திலும் அந்த சோகம் தொடர்ந்தது. ஜாசன் ராய் 5 ரன்னில் கிளீன் போல்டு ஆனார். அடுத்து ‘ரன் குவிக்கும்’ எந்திரம் ஜோ ரூட் இறங்கினார். 5 ஓவர்களில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்களுடன் நல்ல நிலையில் தென்பட்டது.

6–வது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று இரு அணியினரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். இந்த ஓவரை சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி வீசினார். ஜேம்ஸ் வின்ஸ் (22 ரன்), கேப்டன் மோர்கன் (0), ஜோ ரூட் (12 ரன், ரன்–அவுட்) மூவரும் ஒரே ஓவரில் காலியானார்கள். இதனால் இங்கிலாந்து திடீரென நிலை

ஜோஸ் பட்லர் (6), பென் ஸ்டோக்ஸ் (7 ரன்) ஆகியோரும் தாக்குப்பிடிக்காததால் 57 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை (9.2 ஓவர்) பறிகொடுத்து இங்கிலாந்து தத்தளித்தது. முந்தைய தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 230 ரன்களை ‘சேசிங்’ செய்து வரலாறு படைத்த இங்கிலாந்து அணியா? இப்படி ஆடுகிறது என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் எழாமல் இல்லை. சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து ‘கிடுக்குபிடி’ போட்டனர். இதனால் இங்கிலாந்து அணியினர் சற்று நடுங்கி போய் விட்டனர்.

இந்த இக்கட்டான சூழலில் கடைசி கட்ட வீரர்கள் இங்கிலாந்துக்கு புத்துயிர் கொடுத்தனர். குறிப்பாக மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் மானத்தை காப்பாற்றினார். அவருக்கு கிறிஸ் ஜோர்டான் (15 ரன்), டேவிட் வில்லி (20 ரன், 2 சிக்சர், நாட்–அவுட்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி 41 ரன்களுடன் (33 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

கடைசி 3 ஓவர்களில் 44 ரன்களை சேகரித்ததே அந்த அணி சவாலான இலக்கை அடைய வித்திட்டது. சுழற்பந்து வீச்சாளர் அமிர் ஹம்சாவின் 19–வது ஓவரில் மட்டும் 3 சிக்சர் உள்பட 25 ரன்கள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மொயீன் அலி– டேவிட் வில்லி ஜோடி 8–வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 8–வது விக்கெட்டுக்கு ஒரு ஜோடியின் அதிகபட்சம் இது தான். ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் முகமது நபி, ரஷித் கான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் வீழ்ந்தது

பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் அபாயகரமான வீரரான விக்கெட் கீப்பர் முகமது ஷாசத் (4 ரன்), 3–வது பந்திலேயே எல்.பி.டபிள்யூ. ஆனார். கேப்டன் அஸ்கார் ஸ்டானிக்ஜாய் (1 ரன்), குல்படின் நைப்பும் (0) வந்த வேகத்தில் வெளியேற ஆப்கானிஸ்தான் வீழ்ச்சி பாதைக்கு தள்ளப்பட்டது. அதன் பிறகு அந்த அணியால் கடைசி வரை நிமிர முடியவில்லை.

20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 127 ரன்களே எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொயீன் அலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

3–வது ஆட்டத்தில் விளையாடி 2–வது வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து அரைஇறுதி வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. இங்கிலாந்து அணி தனது கடைசி லீக்கில் வருகிற 26–ந்தேதி இலங்கையுடன் மோதுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு இது 3–வது தோல்வியாகும்.

Related Posts