நீர்வேலி மற்றும் கோப்பாய் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக திருடர்களின் தொல்லை அதிகாரித்துள்ளது. இந் நிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை வெடி கொழுத்தி திருடர்களை துரத்திய சம்பவம் கோப்பாயில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
நேற்றுமுன்தினம் அதிகாலை 1 மணியளவில் கோப்பாய் வடக்கில் திருடர்களின் நடமாட்டத்தால் நாய்கள் குரைத்ததால் விழிப்படைந்த மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து ஏனையோரையும் விழிப்படையச் செய்தனர். இதனால் அதிகாலை நேரத்தில் கேட்ட பட்டாசு சத்தத்தினால் மக்கள் விழிப்படைந்து பீதியடைந்தனர்.
திருடர்களின் நடமாட்டத்தால் பிரதேச மக்கள் பதற்றத்துடனும் பீதியுடனும் இரவுப் பொழுதைக் கழிப்பதால் திருடர்களின் நடமாட்டத்தை அவதானித்தும் பட்டாசுகளை வெடிக்க வைக்கும் புதிய வியூகத்தை மக்கள் கையாள்வதினால் ஏனைய மக்கள் உசாரடைந்தும் வருகின்றனர்.
இதேவேளை நேற்று நள்ளிரவும் நீர்வேலி வில்லுமதவடியில் வீடு ஒன்றில் திருடுவதற்கு திருட்டுக் கும்பலொன்று முயற்சித்த போது அவர்களின் சத்தத்தினால் வீட்டிலிருந்தவர்கள் குக்குரலிட திருடர்கள் ஓடிச்சென்றுள்ளனர்.
மேலும் இப்பிரதேசங்களின் மக்களின் இரவு பாதுகாப்பிற்காக விழிப்புக் குழுக்களை அமைப்பதற்கு கோப்பாய் பிரதேச செயலகம் ஏற்பாடுகளை மேற்கொண்டது. ஆனால் இதுவரை கிராம உத்தியோகத்தர் பிரிவு ரீதியாக விழிப்புக்குழுக்கள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.