சாவகச்சேரி நகர் பகுதியில் அழகுசாதனப் பொருள் விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞரொருவர் இருவேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 2 மாணவிகளை காதலித்ததன் விளைவாக அவர்கள் இருவரும் தற்கொலைக்கு முயற்சித்து ஆபத்தான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவத்தை அறிந்த குறித்த இளைஞன் உடனடியாகவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்மராட்சி பிரதேசத்திலுள்ள இருவேறு பாடசாலைகளில் கல்வி பயின்று வரும் 16 வயது மற்றும் 17 வயதுடைய மாணவிகள் இருவரை குறித்த இளைஞன் காதலித்து வந்துள்ளார். இந்த விடயம் குறித்த மாணவிகளின் வீட்டாருக்கு தெரியவந்துள்ள நிலையில் ஒரு மாணவி தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதேபோன்று மற்றைய மாணவியும் தூக்கமாத்திரையை உட்கொண்டு வீட்டுக் கிணற்றில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த 2 மாணவிகளும் ஆபத்தான நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தினை அறிந்த இளைஞன் உடனடியாகவே சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.