வடக்கு மாகாணசபையின் தீர்வுத் திட்டம் தாமதம்!

வடக்கு மாகாண சபையினால் தயாரிக்கப்பட்டு வரும் அரசியல் தீர்வுத் திட்டம், நாளை வியாழக்கிழமை நடைபெறும் மாகாண சபை அமர்வில் சமர்பிக்கப்படாது என்று தெரியவருகின்றது. அரசியல் தீர்வுத் திட்டம் இன்னமும் முழுமைப்படுத்தப்படாமையால் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறும் விசேட அமர்விலேயே சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அரசினால் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் வடக்கு மாகாண சபையும், புதிய அரசமைப்புக்கான கருத்துக்களை முன்வைப்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது.

இந்தக் குழுவினர் மூன்று உப பிரிவுகளாகப் பிரிந்து அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வரலாறு சார்ந்த விடயம், அரசியல் ரீதியான விடயம், அதிகாரப் பகிர்வு தொடர்பிலான விடயம் என்று மூன்று குழுக்கள் இதற்காக நியமிக்கப்பட்டிருந்தது.

மூன்று குழுக்களும் தமது வரைபுகளை முன்வைத்து நேற்று மாலை, முதலமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் நடத்தியிருந்தது. இதன்போது பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன. வழங்கக் கூடிய அதிகாரப் பகிர்வையே கோர வேண்டும் என்று ஒரு தரப்பினர் இதன் போது கருத்துத் தெரிவித்துள்ளனர். 13 ஆவது திருத்தத்தை தாண்டிய அதேவேளை சமஷ்டியை ஒத்த வகையில் தீர்வுத் திட்டம் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சியை மையமாக வைத்தே அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மூன்று குழுக்களினதும் வரைபுகளை ஒருங்கிணைத்து ஒரு அரசியல் தீர்வு தயாரிப்பதற்கு போதிய கால அவகாசம் தேவை என்பதால், இதனை நாளை நடைபெறும் அமர்வில் எடுத்துக்கொள்ளாமல் 29ஆம் திகதி இடம்பெறும் விசேட அமர்வில் எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts