‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. ‘தெறி, கபாலி’ இரண்டு படங்களையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். இரண்டு படங்களுக்குமான வியாபாரப் பேச்சுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அவை முடிந்துவிட்டதாகச் சொல்லப்பட்டாலும் எந்த ஏரியா, என்ன விலை என்ற தகவல் இன்னும் வெளியாகாமலே உள்ளது. சில ஏரியாக்களில் இரண்டு படங்களையும் ஒருவருக்கே கொடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இரண்டு படங்களுமே அதிக எதிர்பார்ப்புள்ள படங்கள் என்பதால் வசூலில் இரண்டு படங்களையும் சாதனைப் படங்களாக ஆக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு முடிவெடுத்துள்ளாராம்.
‘தெறி’ படத்தை ஏப்ரல் 14ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள். கோடை விடுமுறை என்பதாலும், சிறுவர், சிறுமியர்கள் விஜய்யின் படங்களை அதிகம் பார்க்க வருவார்கள் என்பதாலும் ‘தெறி’ படத்தை குறைந்தது ஒரு மாத காலமாவது சுமார் 500 தியேட்டர்களில் ஓட வைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆக்ஷன் படம் என்பதால் எப்படியும் விஜய் ரசிகர்களை இந்தப் படம் கவரும் என்று எதிர்பார்க்கிறார்கள். ‘தெறி’ படம் ஒரு மாதம் ஓடி முடிவதற்கும் தமிழ்நாட்டில் தேர்தல் முடிவதற்கும் சரியாக இருக்கும், அதன் பின் ‘கபாலி’ படத்தை ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்களாம்.
அந்த விதத்தில் மே மாதம் 27ம் தேதி ‘கபாலி’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என்று கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். கோடை விடுமுறையின் கடைசி வாரம் என்பதால் அந்த ஐந்து நாட்களிலேயே படம் மிகப் பெரிய வசூலைப் பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை வினியோகஸ்தர்கள் ஐந்து நாட்களிலேயே பள்ளி திறந்துவிடுவார்கள் என்று காரணம் கூறினால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் 19ம் தேதிக்கு அடுத்த நாளான 20ம் தேதி வெளியிட முடியுமா என்றும் யோசிக்கிறார்களாம். 20ம் தேதி வெளியிட்டால் பள்ளிகள் திறப்பதற்குள் பத்து நாட்களில் வசூலை அள்ளிவிட முடியும் என வினியோகஸ்தர்கள் கூறுகிறார்களாம். விரைவில் இது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.