தனது மகள் யசோதராவை கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டம் தீட்டியிருந்தார் என்று குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
ஹூனுப்பிட்டியவில் நேற்று நடந்த சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கான தெளிவுபடுத்தும் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியத போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த 9 ஆண்டுகளாக தான் அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கட்சியிலிருந்த அனைவருக்கும் தன்னுடன் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு வருடத்திற்கு ஆட்சியில் இருந்திருந்தால் நாட்டின் மொத்த பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டிருக்கும் எனவும், அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டிருக்கும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்திலும் திருடர்கள் சிலர் இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்சவின் 13 பேர் அடங்கிய குழு ஒன்று தன்னை அரசியலிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இது வரைகாலமும் பொறுமையுடன் செயற்பட்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது கடுமையான நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.