சூப்பர் 10 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், 8 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
தர்மசாலா, இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. கப்தில் 39 ரன் (27 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), கேப்டன் கேன் வில்லியம்சன் 24, கோலின் மன்றோ 23, ராஸ் ரெட்லர் 11, எலியட் 27 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஆடம் மில்னி 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பாக்னர், மேக்ஸ்வெல் தலா 2, வாட்சன், எம்.மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, கவாஜா – வாட்சன் ஜோடி 5.2 ஓவரில் 44 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. வாட்சன் 13 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கேப்டன் ஸ்மித் 6 ரன் மட்டுமே எடுத்து சான்ட்னர் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். நன்கு விளையாடிக் கொண்டிருந்த கவாஜா 38 ரன் எடுத்த நிலையில் (27 பந்து, 6 பவுண்டரி) ரன் அவுட்டானது, ஆஸி. அணிக்கு பின்னடைவைக் கொடுத்தது. அதிரடி வீரர் வார்னர் 6 ரன் எடுத்து சான்ட்னர் சுழலில் கப்தில் வசம் பிடிபட்டார். ஆஸி. அணி 10.1 ஓவரில் 66 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது.
ஓரளவு தாக்குப்பிடித்த மேக்ஸ்வெல் 22 ரன், மிட்செல் மார்ஷ் 24 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஏகார் 9, பாக்னர் 2, கோல்டர் நைல் 1 ரன்னில் அணிவகுக்க, ஆஸி. அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன் மட்டுமே எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணி 34 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.
நெவில் 7, ஸம்பா 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் மெக்லநாகன் 3, கோரி ஆண்டர்சன், சான்ட்னர் தலா 2, சோதி 1 விக்கெட் வீழ்த்தினர். மெக்லநாகன் (3-0-17-3) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் 22ம் தேதி பாகிஸ்தானை சந்திக்கிறது.