கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் சுபேந்திரன் என்னும் ஈழத்தமிழ் அகதி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவல் துறை ஆய்வாளரும் உடன் இருந்த காவலர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தை நம்பி தஞ்சம் புகுந்திருக்கின்ற ஈழத் தமிழ் சகோதரர்களையும், சகோதரிகளையும் மிகக்கொடுமையாக அதிகாரிகள் நடத்தும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இத்தகையப் போக்கை தடுத்து நிறுத்தவும், தவறு இழைக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதம் 23ஆம் திகதி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட ஈழ அகதி சுபேந்திரன் மீது காவல் துறை அதிகாரிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டனர்.
இதன் காரணமாக இரண்டு கால்களும் முறிந்த நிலையில், ஸ்டாலின் அரசு மருத்துவ மனையில் எலும்ம்பு முறிவு பிரிவில் சுபேந்திரன் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.