தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், என்.ஐ.ஐ.டி. டிவியும் இணைந்து தொலைக்காட்சியில் இணையவழி மூலமாக இலவசப் படிப்புகளை வழங்குகின்றன.
இதுகுறித்து பல்கலைக்கழக முதன்மையர் (ஆய்வுத் துறை) எஸ். சுவாமிநாதன் தெரிவித்தது:
உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் மாணவர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையில் சாஸ்த்ரா பல்கலைக்கழகமும் என்.ஐ.ஐ.டி. டிவியும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இந்த உடன்படிக்கை பி.டெக்., எம்.டெக்., பொறியியல் பயின்ற பட்டதாரி மாணவர்களுக்குத் தொழில்கள் சார்ந்த கல்வி முன்னேற்றத்தையும், வேலையில் அமர்த்தப்படும் தகுதியையும் ஏற்படுத்தும். அது மட்டுமல்லாமல் பல்வேறு துறைப் படிப்புகளுக்கும் இது விரிவாக்கப்படும்.
உயர்தரமான கல்வி சார்ந்த இணையவழி விடியோக்கள் 140 நாடுகளில் வாழும் பொறியியல் பட்டதாரிகளை இலவசமாகச் சென்றடையும். என்.ஐ.ஐ.டி. டிவியின் இணையதளத்தின் மூலமாக இது நிகழும்.
சாஸ்த்ராவில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாடங்களை நடத்துவர். வளர்ந்து வரும் பயோ மெடிக்கல் நானோ தொழில்நுட்பவியல், பயோ சென்சார்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு முறை ஆகியவற்றை சாஸ்த்ரா வழங்கும். இந்தக் கூட்டு முயற்சி மூலம் படிப்புகளை இணையவழியில் உடனடியாக கிடைக்கும் வகையில் உலகம் எங்கும் உள்ள 140 நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இதுவரை இல்லாத இந்த முதல் முயற்சி மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இசைந்துபோகிறது. குறிப்பாக மனிதவள மேம்பாடு அமைச்சகக் கொள்கையின் தேசிய மூக் மிஷனுடனும் ஒத்துப்போகிறது.
சாஸ்த்ரா ஏற்கெனவே இந்திய தொழில்நுட்பக் கழகத்துடனும், (ஐஐடி) என்பிடெல் முயற்சிகளுடனும் இணைந்துள்ளது. அதன்மூலமாக 13 படிப்புகளைத் தந்துள்ளது. மேலும், தேசிய மூக் கொள்கைப் பணியில் அது ஆரம்பிக்கப்படும்போது இணைய இருக்கிறது.
என்.ஐ.ஐ.டி. டிவியுடன் இந்தக் கூட்டு முயற்சி மிக முக்கியமானது. உள்ளுரில் வடிவமைக்கப்பட்ட மூக் போன்ற முக்கிய முயற்சியை இது குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதன்மையான பயிற்சி வழங்கும் நிறுவனத்துடன் பணியாற்றும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.