இந்தியாவின் நாக்பூரில் ஆரம்பமான உலகக் கிண்ண ‘ருவென்டி 20’ சுப்பர் 10 சுற்றில் இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டத்தின் போது அறிமுக வீரரான சாண்டனரின் அபாரமான பந்துவீச்சால் 79 ஓட்டங்களுடன் இந்திய அணியை சுருட்டிய நியூசிலாந்து அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் என்பதால் நியூசிலாந்து அணி 3 சுழல் பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்தது. தலைவர் வில்லியம்ஸனின் இந்த மாற்றம் அந்த அணிக்கு நன்கு உதவியது.
நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. குப்தில், வில்லியம்ஸன் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரை அஸ்வின் வீச, முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார். இரண்டாவது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த முன்றோவும் சிக்ஸர் விளாசிய சில நிமிடங்களிலேயே 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கோரி அண்டர்சன் களமிறங்கி நிதானமாக வில்லியம்ஸனுடன் இணைந்து நிதானமாக ஆடினார். இவர்களைப் பிரிக்க பகுதி நேரமாகப் பந்து வீசும் ரெய்னாவைப் பயன்படுத்தினார் டோனி. அவரின் நுட்பத்தால் வில்லியம்ஸன் (8) ஸ்ரொம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
வில்லியம்ஸனுடன் சேர்ந்த ரெய்லரும் நிதானமாக ஆடினார். அண்டரசனுக்கு ரெய்னா வீசிய பந்தை அவர் நேராக அடித்தார். பந்தைப் பாய்ந்து பிடித்த ரெய்னா தனது பக்கத்தில் இருந்து ஓட்டம் எடுப்பதற்காக கிரிஸை தாண்டிய ரெய்லரை ரன் அவுட் ஆக்கினார். அப்போது ரெய்லர் 10 ஓட்டங்களை எடுத்திருந்தார்.
நிலைத்து ஆடிய அண்டர்சன் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பும்ராவின் பந்தில் ‘போல்ட்’ ஆனார். சாண்ட்னர் 18, எல்லியொட் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இந்நிலையில் 20 ஓவர்களும் நிறைவடைய நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை எடுத்தது.
இந்தியாவின் பந்துவீச்சில் அஸ்வின், நெஹ்ரா, பும்ரா, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தவான் 1, ரோகித் சர்மா 5, ரெய்னா 1, யுவராஜ் சிங் 4 என வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப ஆரம்பித்தனர்.
ஒரு புறத்தில் நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த கோலியுடன் டோனி இணைந்தார். இந்தக் கூட்டணியும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. கோலி 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சோதியின் பந்தில் விக்கெட் காப்பாளரான ரோஞ்சியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பாண்ட்யா 1, ஜடேஜா 0 என வெளியேற, அஸ்வின் டோனிக்கு துணையாக நின்று 10 ஓட்டங்களை எடுத்தார். மேலதிகமாக ஒரு ஓட்டத்தை எடுக்க முயன்றபோது ரோஞ்சியால் ‘ஸ்ரொம்ப்’ செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். நேஹ்ரா ஓட்டம் எதனையும் எடுக்காது வெளியேற, பொறுமையாக ஓட்டங்களை சேர்த்த டோனியும் (30) சாண்ட்னரின் பந்தில் மக்கலத்திடம் பிடி கொடுத்து நடையைக் கட்டினார்.
18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 79 ஓட்டங்களையே பெற்றது.
நியூசிலாந்தின் பந்து வீச்சில் சாண்ட்னர் 4, சோடி 3, மக்கலம் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக சாண்டனர் தெரிவானார்.