நாட்டில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கும், இது தொடர்பாக உடனடியாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.
இக்குழுவில் அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுசில் பிரேம ஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரத்னாயக்க, பிரதி அமைச்சர்களான எரான் விக்கிரமரத்ன, அஜித் பி பெரேரா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.
இக்குழுவினருடைய முதலாவது அறிக்கை ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இவ்விசேட குழுவினர் மின்சக்தித்துறையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். அதேவேளை, நாட்டின் அபிருத்தித்துறை மற்றும் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் எவ்வாறு மின்சார சேவையினை வழங்கலாம் என்பது தொடர்பான பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.
மேற்குறித்த விசேட குழுவானது எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தங்களுடைய பொறுப்பான கடமைகளை மேற்கொள்ள இருப்பதுடன் ஜனாதிபதி இக்குழுவுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை இத்துறையில் அனுபவம்வாய்ந்த அறிஞர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக இக்குழுவுக்கு தேவையான அதிகாரங்களை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.