ஊழல் புகார் எதிரொலியால் நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் தற்காலிமாக நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாசர் தலைமையிலான புதிய அணி பதவியேற்ற பின்னர், பல அதிரடியான நடவடிக்கைகளும், நலத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் செய்துள்ளதாக சமீபத்தில் நடிகர் சரத்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சரத்குமார் மீது புகாரும் கொடுக்கப்பட்டது. சரத்குமார், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று அன்றே போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் அளித்தார். இதேப்போன்று நடிகர்கள் ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் ஆகியோர் மீதும் ஊழல் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், சரத்குமார், ராதாரவி மற்றும் வாகை சந்திரசேகர் மீது ஊழல் புகார் இருப்பதால், மூவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கும் வரை அவர்களை நடிகர் சங்கத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிமாக நீக்கப்படுவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேப்போன்று, சங்க கட்டடம் கட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்துவது என்றும், அடுத்தமாதம் இந்த கிரிக்கெட் நடைபெற இருப்பதாகவும், இதில் நான்கு மொழியை சேர்ந்த நடிகர்கள் பங்கேற்க இருப்பதாகவும் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.