யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் என்பன இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுவிக்கப்படவுள்ளன என்று யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மூன்று மணி நேரப் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் வரவுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லமாக இருந்த – தற்போது இராணுவ முகாமாக உள்ள பிரதேசத்தில் ஹெலி மூலமாக ஜனாதிபதி மைத்திரிபால வந்திறங்குவார்.
உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மாதிரி வீட்டை பார்வையிடவுள்ளார். 21 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருத்து வீடு (பிற்றிங்) இதனைப் பார்வையிட்டு, அதனை வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்வார்.
இதன் பின்னர், காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியில் இடம்பெறும் காணி கையளிப்பு நிகழ்வில் பங்கேற்பார்.
கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி வலி.வடக்கில் 716 ஏக்கர் நிலப் பரப்பு மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், இதனை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிக்கவுள்ளார்.
இதன்போது, காங்கேசன்துறை பிரதேசத்தில் மேலும் 130 ஏக்கர் நிலப் பரப்பு விடுவிக்கும் அறிவித்தலையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி மற்றும் கங்கேசன்துறை நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பனவும் இந்த நிகழ்வில் வைத்து வடக்கு மாகாண கல்வி அமைச்சிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.
இதுவரை காலமும் காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் ஆலயத்துக்குச் சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலி, பின்நகர்த்தப்பட்டு காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியை அண்மித்து அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.