முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்றி உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கான கட்டணமாக 14 கோடியே 20 இலட்சம் ரூபா செலுத்த வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்தக் கட்டணத்தைச் செலுத்தக் கோரி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக இலங்கை போக்குவரத்துச் சபை வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த மனு கொழும்பு வர்த்தக நீதிமன்றில் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. முறைப்பாட்டில் திருத்தம் செய்ய அனுமதியளிக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபையின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றில் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான் சிரான் குணரட்ன, வழக்கை ஜூன் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகப் பிரதானி காமினி செனரட், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.