இறுதிப்போரில் 400 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் மீட்பு! பெருந்தொகையானவை ராஜபக்‌ஷவினரால் கொள்ளை!

இறுதி யுத்தத்தின்போது 400 கிலோவுக்கு மேற்பட்ட தங்கம் மீட்கப்பட்டதாக நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை தகவல் வெளியிட்ட பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா, இவற்றுள் பெருந்தொகையான தங்கத்தை ராஜபக்‌ஷவினர் கொள்ளையடித்துவிட்டனர் என பகிரங்கமாக ஆதாரத்துடன் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், தன்னால் கைப்பற்றப்பட்ட 220 கிலோகிராம் தங்கத்தின் உரிமையாளர்களின் பெயர், விவரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்று மேலும் தகவல் வெளியிட்ட அவர், தங்கம் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இறுதி யுத்தத்தின்போது வடக்கிலிருந்து 150 கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டதாக தனக்கு தகவல் தரப்பட்டதாகவும் பிரதமர் ரணில் நேற்றுமுன்தினம் தகவல் வெளியிட்ட நிலையிலேயே சரத் பொன்சேகா நேற்று இந்தத் தகவலை வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதிச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் தனது கன்னி உரையை நிகழ்த்தியபோதே அமைச்சர் பொன்சேகா இந்தத் தகவலை வெளியிட்டதுடன், மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கில் 137 கிலோகிராம் தங்கம் கிடைக்கப்பெற்றதாக பிரதமரால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவலும் திரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏனெனில், இறுதி யுத்தத்தில் நான் இராணுவத் தளபதியாக பதவி வகித்தபோது 220 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டது. இந்தத் தங்கத்தில் பெயர், விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும், அப்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட பஸில் ராஜபக்‌ஷ 110 கிலோகிராம் தங்கம் மீட்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். தங்கம் மீட்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே நூற்றுக்கு 50 வீதம் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது.

அதன்பின்னர் நான் இராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டது. சுமார் 400, 500 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.

இவை அனைத்தும் ராஜபக்‌ஷவால் கொள்ளையடிக்கப்பட்டவை. எனவே, இது தொடர்பில் விசாரணை நடத்தவேண்டும்” – என்றார்.

Related Posts