20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணி 8 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை தோற்கடித்தது.
16 அணிகள் இடையிலான 6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. சூப்பர்–10 சுற்றுக்கு தகுதி பெறும் எஞ்சிய இரு அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.
முதல் சுற்றில் களம் இறங்கியுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி, சூப்பர்–10 சுற்றுக்கு முன்னேறும்.
வங்காளதேசம் 153 ரன்
இந்த நிலையில் தொடரின் 3–வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நேற்று நடந்தது. இதில் வங்காளதேசம்–நெதர்லாந்து அணிகள் மோதின. காயத்தில் இருந்து மீளாத வங்காளதேச இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் இடம் பெறவில்லை.
டாஸ் ஜெயித்த நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரென் வங்காளதேசத்தை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட் செய்த வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் தவிர மற்றவர்கள் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. மறுபுறம் தமிம் இக்பால் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை 150 ரன்களை கடக்க வைத்தார்.
20 ஓவர்களில் வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. தமிம் இக்பால் 83 ரன்களுடன் (58 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். சவும்யா சர்கார், சபிர் ரகுமான் தலா 15 ரன்கள் எடுத்தனர். ஷகிப் அல்–ஹசன் 5 ரன்னில் கேட்ச் ஆனார்.
அடுத்து களம் இறங்கிய நெதர்லாந்து அணியில் குறிப்பிடும்படி யாரும் பெரிய இன்னிங்சை ஆடவில்லை. மைபர்க், கேப்டன் பீட்டர் போரென் அதிகபட்சமாக தலா 29 ரன்கள் வீதம் எடுத்தனர். ஓரளவு நெருக்கடி அளித்தார்களே தவிர, வங்காளதேசத்தை அதிர்ச்சி வளையத்துக்குள் தள்ளும் அளவுக்கு பேட்டிங்கில் மிரட்டவில்லை.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றியை உறுதி செய்தார். நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 8 ரன் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி கண்டது. அல்–அமின் ஹூசைன், ஷகிப் அல்–ஹசன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 83 ரன்கள் விளாசிய தமிம் இக்பால் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.