பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் 7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல்போயுள்ளனர் என்றும், அவர்களில் பலர் ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான தினேஷ் குணவர்தன எம்.பி. வெளியிட்ட கருத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. கடும் ஆட்சேபனை வெளியிட்டார்.
அத்துடன், காணாமல்போனோர் விவகாரம் குறித்து சுமந்திரனுக்கும் தினேஷ் குணவர்தனவுக்குமிடையில் சபையில் கடும் சொற்போர் மூண்டது.
நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.
சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத் தாக்கல், வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர், காணாமல்போனோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் எம்.பி. கொண்டுவந்த சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமானது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில், காணாமல்போனோர் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துப் போலியானது, பரணகம ஆணைக்குழுவின் பிரகாரம் 7 ஆயிரத்துக்கும் குறைவானர்களே காணாமல்போயுள்ளனர், அவர்களின் பலர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர், புலிகளால் கடத்தப்பட்டவர்களே காணாமல்போயுள்ளனர் என்றெல்லாம் விமர்சனங்களை அடிக்கிக்கொண்டு சென்றார் தினேஷ் எம்.பி.
இதற்போது குறுக்கீடு செய்த சுமந்திரன் எம்.பி., தினேஷ் குணவர்தன வெளியிட்ட கருத்துகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார். சுமந்திரன் எம்.பியின் ஒலிவாங்கி அவ்வேளையில் இயக்கிவிடப்படாததால் அவர் வெளியிட்ட கருத்துகள் விளங்கவில்லை. எனினும், கடும் சீற்றத்துடன் தினேஷ் குணவர்தனவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்தரமடைந்த தினேஷ், புலிகளுக்காக செயற்பட்டவர்களுக்கு, செயற்பட்டுகொண்டிருப்பவர்களுக்கு தாங்க முடியாதுதான் என்று குறிப்பிட்டார்.
தினேஷுக்கு சார்பாக அவரது கட்சி உறுப்பினரான சிசிற ஜயக்கொடியும், பிரசன்ன ரணதுங்கவும் குரல் எழுப்பினர்.
அப்போது ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் இனவாதம் பேச வேண்டாம் என அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதேவேளை, இவ்விவாதத்தின்போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலும் கருத்து மோதல் ஏற்பட்டது.
7 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே காணாமல்போயுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார் என தினேஷ் குணவர்தன எம்.பி. தெரிவித்தபோது அதற்கு அமைச்சர் மங்கள கடும் எதிர்ப்பை வெளியிட்டார். நான் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதனால் கொதிப்படைந்த தினேஷ் நாட்டைக்காட்டிக்கொடுத்த வெளிவிவகார அமைச்சர் என மங்களவை தாக்கிப் பேசினார். இவ்வாறு இருவருக்குமிடையில் கடும் சொற்சமர் ஏற்பட்டது.