இந்தியாவில் இடம்பெறவிருக்கும் ‘இருபதுக்கு 20’ உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றச் செல்லும் இலங்கை அணியின் வீரர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியினரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் மைதானத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் உடனிருந்தார்.
‘ஒரே அணி – ஒரே தேசம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை இலங்கைக் கிரிக்கெட் அணியினர் உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்துகொள்கின்றார்கள்.
இதைமுன்னிட்டு ‘ஒரே அணி – ஒரே தேசம்’ எனும் வாக்கியம் பொறிக்கப்பட்ட இலட்சினையை இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபாலவால் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.
‘ஒரே அணி – ஒரே தேசம்’ (One Team – One Nation) உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கமும் இதன்போது ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.