ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே, மஹிந்த ராஜபக்ஷவை விவசாய அமைச்சரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதியாக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது.
‘நச்சுத்தன்மையற்ற நாடு’ வேலைத்திட்டத்தின் கீழ் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, கல்வி மற்றும் விற்பனைக் கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விவசாய அமைச்சர் துமிந்த திஸநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது வரவேற்புரையை விவசாய அமைச்சரின் செயலாளர் நிகழ்த்தினார்.
தனதுரையின் ஆரம்பத்தில் மதத்தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவிட்டு, அதன் பின்னர் ஜனாதிபதியின் பெயரைக் குறிப்பிட்டார். அவ்வேளையிலேயே சர்ச்சை ஏற்பட்டது.
அதாவது, இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன என சொல்வதற்குப் பதிலாக சொற்தவறி, “இலங்கை ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ” என்று கூறிவிட்டார்.
இதனால், மேடையில் அமர்ந்திருந்த அரசியல்வாதிகள் சிரித்துவிட்டனர். அதன்பின்னர் அமைச்சின் செயலாளருக்கு பிழை சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து அவர் பகிரங்கமாக இரண்டு தடவைகள் மன்னிப்புக் கோரினார்.