Ad Widget

கலாபவன் மணியின் மரணத்தில் திடீர் சந்தேகம்: உடலில் விஷம் இருந்ததா?

மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

kala-bavan-mani

மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மறுமலர்ச்சி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், ‘ஜெமினி’, ‘மழை’, ‘வேல்’, ‘ஆறு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று திடீரென மோசமாகி மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கலாபவன் மணி உயிர் பிரிந்தது.

இந்நிலையில், கலாபவன் மணி தனது இல்லத்தில் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மரணமடைந்த கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு, இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து, காலை 11 மணிமுதல் பொதுமக்கள் அஞ்சலிகாக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

அவரது உடலுக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மலையாள திரைப்பட நட்சத்திரங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை 5 மணியளவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மறைந்த கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவல் துறையிடம் கூறி இருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல் துறை, பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின் தான் எதையும் உறுதியாக கூற முடியும் என்கின்றனர்.

Related Posts