ஜனாதிபதி பிரதமரின் மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

நல்லிணக்கத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டு மகா சிவராத்திரி! – ஜனாதிபதி

மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயா சாரங்கள், அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை, நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள இலட்சக் கணக்கான இந்து பக்தர்கள் தங்களிடம் ஆன்மீக நல்லொழுக்கப் பெறுமானங்களை வளர்த்துக் கொள்ளவும் லௌகீக வாழ்க்கையை மிகச் சிறப்பான முறையில் அமைத்துக்கொள்ளவும் அனுஷ்டிக்கின்ற மகா சிவராத்திரி தினத்தின் ஊடாக வெளிப்படுவது நன்மைகளின் மீதான மனிதனது உயர்ந்த ஈடுபாடும் பிணைப்புமாகும்.

இந்நன்னாளில் இந்து பக்தர்கள் அமைதியையும் மன ஆறுதலையும் எதிர்பார்ப்பதோடு, அவர்களது சகல ஆசாபாசங்கள் மற்றும் சமய அனுஷ்டானங்களின் போதும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவருக்காக நல்லிணக்கமான வாழ்வுக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். நீண்ட நெடுங்காலமாக மனித உள்ளங்களில் கருக்கொண்டு தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் இத்தகைய பாரம்பரியங்கள் எப்போதும் மனிதனது அமைதியான சமாதானமான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளன.

கடவுளும் மனிதனும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இத்தகைய சமய அனுஷ்டானங்கள் மூலம் சமூகத்திற்குக் கிடைக்கும் நற்செய்தி முழு மனித சமூகத்தினதும் மதிப்பிற்கும் அங்கீகாரத்திற்கும் பாத்திரமாய் அமைகின்றன.

மகா சிவராத்திரி தினத்தை அதன் உண்மையான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கும் சகல இந்து பக்தர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என அவ்வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மனித நேயத்தை கட்டியெழுப்ப சிவராத்திரியில் பிரார்த்திப்போம் – பிரதமர்

“மனித நேயத்தை கட்டியெழுப்பவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக மகா சிவராத்திரி தினத்தை ஆக்கிக் கொள்வோம்” என பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உலகம் முழுவதுமுள்ள இந்து பக்தர்கள் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று உதயமாகும் மகாசிவராத்திரி தினத்தை வெகுவிமர்சையாகக் அனுஷ்டிக்கின்றனர். இந்த இரவு சிவபெருமானின் விருப்பத்துக்குரிய இரவாகவும் கருதப்படுகிறது. இத்தினத்தில் தமது ஆன்மீக வாழ்வை ஒளியூட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் இந்து பக்தர்கள் இரவு முழுவதும் நித்திரையின்றி விரதம் அனுஷ்டிப்பதோடு, புண்ணிய கருமங்களிலும் ஈடுபடுவர்.

ஒளிரும் விளக்கு மூலம் இரவு ஒளியூட்டப்படுவது போன்று அறியாமை இருள் நீங்கி வாழ்க்கை குறித்த விளக்கம் கிடைக்கட்டும் என்று இந்த இரவில் அவர்கள் பிரார்த்திக்கின்றனர். சிவராத்திரியை அர்த்தமிக்கதாக கழிப்பதன் மூலம் விடுதலைக்கான வழியை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.

சுதந்திரம், நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடைந்து கொள்வதற்கு பாரிய அர்ப்பணிப்பு, பொறுமை, துணிச்சல், மானிட அன்பு அவசியம் என்பதில் சந்தேகமில்லை. இன, மத பேதங்களை விதைத்து எமது நாட்டை இருளில் தள்ளுவதற்குப் பல்வேறு சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், மனிதநேயத்தைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வதற்கும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக மகா சிவராத்திரி தினத்தை ஆக்கிக் கொள்வோம்.

சகோதர இந்து மக்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் அர்த்தபூர்வமான மகாசிவராத்திரி தினமாக இத்தினம் அமையட்டும் என்று பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்து்ளளார்.

Related Posts