மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். அவ்வகையில் இன்று (07) திங்கட்கிழமை உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து இந்து மக்களாலும் பக்தி பூர்வமாக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்களும் விலக்கல்ல. தங்களின் ஆணவ குணம் அடக்கப்பட, அவர்கள் சிவபெருமானை வணங்கும் நாள் சிவராத்திரிதான். அந்த நாளின் மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டுவிலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக் கூட சிவபெருமானார் அந்த நேரத்தில் ஏற்றுக்கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது.
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.
அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். அவ்வாறான சிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பதற்கு சில வழி முறைகள் உண்டு. அவ்வகையில் சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்தபின், சிவன் கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.
கோயிலுக்குள் கொடிமரத்தைத் தவிர வேறு எந்த சந்நிதியிலும் விழுந்து நமஸ்காரம் செய்யக் கூடாது. அதேபோல் எந்தச் சந்நிதியிலும் அப்பிரதட்சிணமாக வலம் வரக் கூடாது. ஸ்வாமிக்கும் அவர் முன்னால் உள்ள வாகனத்துக்கும் நடுவே போகக் கூடாது. நம் ஆடையில் இருந்து நூலை எடுத்து சண்டிகேஸ்வரர் மீது போடக் கூடாது. ஆண்கள், தலைக்கு மேல் கை கூப்பி ஸ்வாமியை வணங்க வேண்டும். பெண்கள், நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து வழிபட வேண்டும்.
முறைப்படி தரிசனம் முடித்து வீட்டுக்கு வந்தவுடன், சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பின்னர் வீடுகளில் முதலாம் ஜாமம், இரண்டாம் ஜாமம், மூன்றாம் ஜாமம், நான்காம் ஜாமம் என்று பூசைகளை நடத்தி வழிபட வேண்டும்.