மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக உள்ளே வந்த இலங்கை தமிழர் ரவி என்பவரின் பெயரை அகதி முகாம் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளார். மருத்துவமனையில் பேரனை சிகிச்சைக்கு சேர்க்க சென்றதால் தாமதமாகிவிட்டதாக ரவி விளக்கமளித்தும் அதை ஏற்க அந்த அதிகாரி மறுத்துள்ளார். இப்படி செய்தால் நாங்கள் எப்படி வாழ்வது என ரவி கேட்டதற்கு அந்த அதிகாரி, “இதோ கரண்டு மரத்தில் ஏறி சாவு” என கூறியிருக்கிறார். இதைகேட்டு வெறுப்படைந்த ரவி பக்கத்திலிருந்த மின்கம்பத்தில் ஏறி உயர் அழுத்த மின் கம்பியை பிடித்து கருகி இறந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அகதிகள் வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களை தடுக்க வந்த போலீசார் மீதும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரி தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என்று கூறி, ரவிச்சந்திரன் உடலை எடுக்க மறுத்து, இலங்கை அகதிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் மக்கள் மீது தடியடி நடத்தி, அதிகாரி ராஜேந்திரனை சிறைப்பிடித்திருந்த மக்களிடமிருந்து மீட்டு அழைத்து சென்றுள்ளனர். மீண்டும் கடுமையான தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீசி, இறந்த ரவியின் உடலை கைப்பற்றி மறைத்துவிட போலீசார் முயற்சிசெய்துள்ளனர்.