Ad Widget

மகிந்த அணியினர் காளி கோயிலில் தேங்காய் உடைத்தனர்

அரசுக்கு எதிராக நேர்த்திக்கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொது எதிர்க்கட்சியினர் நேற்று நான்காம் கட்ட தேங்காய் உடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதற்கமைய கொழும்பு முகத்துவாரம் காளி அம்மன் கோயிலில் பந்துல குணவர்தன எம்.பி. தலைமையில் நேர்த்திக் கடன் வைத்து தேங்காய் உடைக்கும் போராட்டம் இடம்பெற்றது.
ஒடுக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், அரசியல் சுதந்திரத்தையும் மீள பெற்றுக்கொள்ளவும் தேங்காய் உடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக பொது எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். மேல்மாகாணசபை உறுப்பினர் ஜெகத்குமாரவின் வீட்டுக்குத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
பொது எதிர்க்கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஜெகத்குமாரவும் இதில் கலந்து கொண்டார். இவர்கள் நேற்றுக் காலை 10.30 மணியளவில் பொது எதிர்க்கட்சியினர் தேங்காய் உடைத்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பந்துல குணவர்தன எம்.பி., இன்று நாட்டில் ஊடகத்துறை ஒடுக்கப்பட்டு மக்களுக்குத் தமது கருத்துகளைத் தெரிவிக்க முடியாதுள்ளது. தமிழ், சிங்களம், முஸ்லிம் யாராயினும் அவர்களின் கருத்துகளைத் தெரிவிக்க அனுமதியளிக்க வேண்டும்.
அதுவே, ஊடக சுதந்திரமாகும். நாட்டின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதால், சகல தரப்பிலிருந்தும்  அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சியடைகின்றனர். விவசாயிகளின் மானியம் இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றது. இராணுவத்தினர் ஒடுக்கப்பட்டுள்ளனர். மத சுதந்திரம் இல்லை. நாட்டின் சாதாரண மக்களின் அடிப்படை உரிமையான சமுர்த்தி திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, இவ்வாறான அரசியல் ஒடுக்குமுறையிலிருந்து சுதந்திர அரசியலைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Related Posts