உயர்பாதுகாப்பு வலையமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வலிகாமப் பகுதி மக்களின் காணிகளை விமானநிலைய விஸ்தரிப்புக்காக அபகரிக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தும் முகமாகவும், தம்மை தமது நிலங்களில் குடியமர்த்தல் தொடர்பாகவும் 32 நலன்புரி நிலையங்களில் வாழும் மக்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) கண்ணகி நலன்புரி நிலையத்தில் வாழும் மக்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி தம்மைச் சந்தித்து எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் தம்மை குடியமர்த்துவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் தற்போது விமானநிலையத்தை விஸ்தரித்தல், துறைமுகத்தை விஸ்தரித்தல் என பல கட்டுமானப் பணிகளுக்கு எமது காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன. இது தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் ஜனாதிபதியின் வாக்குறுதியின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தமது மீள் குடியேற்றம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை சுன்னாகம் சபாபதி நலன்புரி நிலைய கிராமத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது வலிகாமப் பிரதேச மக்கள் வாழும் 32 நலன்புரிக் கிராமங்களும் ஒவ்வொரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை அனுட்டிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு, அனைத்துக் கட்சிகள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், புலம்பெயர் அமைப்புக்கள், மக்கள் என அனைவரினதும் ஒத்துழைப்பை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் நலன்புரி நிலையங்களின் பொது அமைப்புத் தெரிவித்துள்ளது.