கடன் திட்டத்துக்குள் அகப்பட வேண்டாம்

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்சாரம் பெறுவதற்காக, மின்சார சபையின் கடன் திட்டத்துக்குள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் இணைத்தலைவர்களில் ஒருவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

பூநகரி பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (02) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பூநகரிப் பிரதேச செயலர் பிரிவில் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. இந்நிலையில், அப்பகுதிக்கு மின்சார வசதி ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூட்டத்தில் சுட்டிக்காட்டினர்.

தற்போது மின்சார சபை கடனடிப்படையில் மின்சார வழங்கலில் ஈடுபட்டுள்ளது. நல்லாட்சிக்கான அரசாங்கம் மின்வழங்கலுக்காக கடனை வெளிநாடு ஒன்றிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக முயன்று வருகின்றது.

இந்நிலையில், தற்போது மின்சார சபையின் கடனடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை பெறும் நடவடிக்கையில் மக்கள் ஈடுபடவேண்டாம் என அவர் தெரிவித்தார்.

Related Posts