யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரை சகோதரர்களும் உறவினருமாக வாள்கள் கத்தி சகிதம் சென்று குத்திக் கொலை செய்த வழக்கில் எதிரிக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பத்து ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் பத்தாயிரம் ரூபா தண்டமும் விதித்துள்ளார்.
தண்டப் பணம் செலுத்தத் தவறினால் ஒரு வருடம் கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இரத்தினம் மணிவண்ணன் என்பவரைக் கொலை செய்த வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த வழக்கில் முதலாவது எதிரியாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த கிருஸ்ணபிள்ளை பிரேமன் என்பவருக்கே தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. அவருடைய சகோதரர்களான இரண்டாம் எதிரி கிருஸ்ணபிள்ளை ரவிக்குமார், மூன்றாம் எதிரி கிருஸ்ணபிள்ளை ஜெயக்குமார் உறவினராகிய நான்காம் எதிரி கந்தசாமி குயிலன் ஆகிய மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
யாழ்ப்பாணம் கோப்பாயில் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி இரத்தினம் மணிவண்ணன் என்பவரை கொலை செய்தார்கள் என கிருஸ்ணபிள்ளை பிரேமன் கிருஸ்ணபிள்ளை .ரவிக்குமார், கிருஸ்ணபிள்ளை ஜெயக்குமார், கந்தசாமி குயிலன் ஆகியோருக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் யாழ்ப்பாணம் மேல் மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
சம்பவ தினத்தன்று இரத்தினம் மணிவண்ணனை முதலாம் எதிரியாகிய கிருஸ்ணபிள்ளை பிரேமன் கத்தியால் நெஞ்சில் குத்தி கொலை செய்தார் என்பதற்கு வழக்குத் தொடுநர் சாட்சியங்களை முன் வைத்திருந்தார். அந்த சாட்சிகளில் ஒருவராகிய இறந்தவரின் மனைவி மணிவண்ணன் பிரமிளா நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
வெளிநாடு செல்வதற்கான பொலிஸ் அறிக்கை பெறுவதற்காக சம்பவம் நடந்த தினத்தன்று காலையில் எனது கணவர் இரத்தினம் மணிவண்ணன் பொலிஸ் நிலையம் சென்றிருந்தார். அப்போது எதிர் வீட்டுக்காரருடன் வாய்ச் சண்டை நடந்தது. சண்டை நடந்து கொண்டிருந்த நேரம் மதியம் 12 மணிபோல எனது கணவன் பொலிஸ் நிலையத்தில் இருந்து திரும்பி வந்தார். அப்போது, முதலாம் எதிரியாகிய கிருஸ்ணபிள்ளை பிரேமன் எனது கணவரை கத்தியால் அவருடைய நெஞ்சில் குத்தினார். முதல் குத்து நெஞ்சின் வலது பக்கத்தில் விழுந்தது. அப்போது எனது கணவர் குனிந்தபோது, இரண்டாவதாக அவரை எதிரி முதுகில் கத்தியால் குத்திக் கொன்றார். அப்போது அவரைத் தடுப்பதற்காக நான் ஓடிச் சென்றபோது எனக்கு முதலாம் எதிரி கத்தியால் கையில் குத்தி என்னைக் காயப்படுத்தினார்.
அந்த நேரம் மற்ற எதிரிகள் மூன்று பேரும் கைகளில் வாள்களுடன் அந்த இடத்தில் நின்றிருந்தனர். ஆனாலும், அவர்களுடைய குடும்பத்தில் இருந்த பெண்கள், அவர்களுடன் இழுபறிபட்டு அவர்களிடம் இருந்த வாள்களைப் பறித்து எடுத்துவிட்டார்கள். அதனால் அந்த வாள்கள் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்படவில்லை என்று கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியை அடையாளம் காட்டி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கத்தியால் குத்தியவர் இவர்தான் என நீதிமன்றத்தில் நின்றிருந்த முதலாவது எதிரியையும் சாட்சி பிரமிளா அடையாளம் காட்டினார்.
மருத்துவ பரிசோதனை நடத்திய மருத்துவர் சாட்சியமளிக்கையில், ‘இறந்தவரின் உடலில் மூன்று வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. அவற்றில் நெஞ்சில் குத்தியதால் ஏற்பட்ட காயம் பாரதூரமானது அது மரணத்தை ஏற்படுத்தக் கூடிய காயம்’ என தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்று புலன் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரி சாட்சியமளிக்கையில் சம்பவ இடத்தில் இரத்தக் கறைகள் காணப்பட்டன. அங்கிருந்து ஒரு கத்தி 2 வாள்கள் என்பவற்றை மீட்டேன் என, அந்தச் சான்று பொருட்களை அடையாளம் காட்டி கூறினார்.
அத்துடன், இந்தக் கொலைக் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட எதிரிகள் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் பொறுப்பதிகாரி, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதியாரிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சுன்னாகத்திற்குச் சென்று எதிரிகளைப் பொறுப்பேற்று வந்ததேன். அவர்களே எதிரி கூண்டில் நிற்கின்றார்கள் எனக் கூறி அவர்களை அடையாளம் காட்டினார்.
இந்த வழக்கில் இரண்டாம், மூன்றாம், நான்காம் எதிரிகளாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தவர்கள் சாட்சிக் கூண்டில் இருந்து சாட்சியமளித்தனர்.
‘இறந்தவரைத் தாங்கள் கட்டிப் பிடிக்கவில்லை. எந்தக்குற்றச் செயலையும் நாங்கள் செய்யவில்லை’ என தெரிவித்தனர். இந்த சாட்சியத்தின் பின்னர், அவர்களுடைய குற்றச் செயலின் செயற்கோர்வை மன்றினால் பரிசீலிக்கப்பட்டது.
அந்தப் பரிசீலனையில் இரண்டாம், மூன்றாம், நான்காம் எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை வழக்குத் தொடுநர் சாட்சியங்களின் மூலம் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் எண்பிக்கவில்லை. எனவே, சந்தேகத்தின் பிரதிபலன் எதிரிகளைச் சென்றடைய வேண்டும் என்ற குற்றவியல் விதியின்படி, மணிவண்ணின் இந்த எதிரிகள் மூவரும் நேரடியாக ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இல்லாதப காரணத்தினால் அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்து, அவர்களை விடுதலையாக்கினார்.
சாட்சிக்கூண்டில் எறிய முதலாம் எதிரி கிருஸ்ணபிள்ளை பிரேமன் சாட்சியமளிக்கையில் கொலைச் சம்பவத்தை ஒப்புக்கொண்டார்.
‘இறந்தவர் எனது தாயாரைக் காலால் உதைத்தார். தாயார் கீழே விழுந்துவிட்டார். அதைக் கண்டதும் குசினிக்குள் ஓடிச்சென்று அவரை வெருட்டுவம் என்று கத்தியொன்றை எடுத்துக் கொண்டு வந்தேன். ஆனால் கத்தி குத்திவிட்டது. அவர் இறந்து போனார்’ என பிரேமன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்ததாவது:
இறந்தவராகிய இரத்தினம் மணிவண்ணனை முதலாம் எதிரி கத்தியால் குத்தி கொலை செய்தமை வழக்குத் தொடுநரின் சாட்சியங்களின் மூலம் எண்பிக்கப்பட்டுள்ளது, முதலாம் எதிரியும் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டார்.
ஆனால் அவர் தவறுதலாகக் குத்திவிட்டேன் எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில் இறந்தவருக்கு நெஞ்சில் ஒரு கத்திக்குத்து. முதுகிலும் கத்திக்குத்து இறந்தவரின் மனைவிக்கு கையில் ஒரு கத்திக்குத்தப்பட்டுள்ளது. இவைகள் எதிரியின் குற்ற வக்கிரத் தன்மையை நிரூபித்திருக்கின்றன. இருப்பினும் அங்கு சண்டை நடைபெற்றது என்பது மன்றினால் ஏற்றுக்கொள்ளப்படுவதால் கைமோசக் கொலைக் குற்றச்சாட்டில் முதலாம் எதிரி குற்றவாளி என கண்டு இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
சம்பவம் நடைபெற்றபோது, எதிரிக்கு 19 வயது. ஆனால் இறந்தவரின் மூன்று பிள்ளைகளில் ஒருவருக்கு பத்து வயது, மற்றவருக்கு ஐந்து வயது, மற்றுமொருவருக்கு மூன்று வயதாகும். இவற்றையும் நீதிமன்றம் கவனத்திற் கொள்கின்றது.
தீர்ப்பளிக்கும்போது, எதிரி மீதான கருணை நிலைப்பாட்டை மட்டும் மன்று கவனத்தில் எடுக்காமல், இறந்துபோன – பாதிக்கப்பட்டவரின் குடும்ப நிலைமை, இறந்தவரை, எதிரி, நெஞ்சில் குத்தியுள்ளமை, என்பவற்றையும் கவனத்தில் எடுத்து, எதிரிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது.
அத்துடன் எதிரி, பத்தாயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்த வேண்டும். அதனைச் செலுத்தத் தவறினால், ஓர் ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். எதிரிகளின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரரும் ஒரு உறவினருமாகிய ஏனைய மூன்று எதிரிகளும் விடுதலை செய்யப்படுகின்றனர் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் போன்ற பகுதிகளில் வாள்வெட்டுக்கள் கோஸ்டி மோதல்கள் தெரு ரவுடித் தனங்கள் என்பன நீதிமன்றங்களினால் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டிருந்தன. இருந்த போதிலும் தண்டனை தீர்ப்புத்தான் முற்றுமுழுதான கட்டுப்பாட்டைக் கொண்டு வரும் என நீதிபதி இளங்செழியன் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தார் அந்த வகையில் கத்திக்குத்து மற்றும் வாள்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில் எதிரிக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி அவர் தீர்ப்பளித்துள்ளார்.