தமிழ் அரசியல் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த, யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகன் மற்றும் கணேசரத்தினம் சாந்ததேவன் ஆகியோர் ஆறு வருடங்களின் பின்னர் கொழும்பு விசேட நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த கோமகன் மற்றும் சாந்ததேவன் ஆகியோர் 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். இவருக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு ஒரே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும், கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றார் என்ற அடிப்படையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து 2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26 ஆம் திகதி கோமகன் விடுவிக்கப்பட்டிருந்தார். குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்படவில்லை என்ற காரணத்தை வைத்து வவுனியா மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அதே வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட கொழும்பு மேல் நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை.
2004ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வெள்ளவத்தைப் பகுதியில் கருணா குழுவினர் மீது தாக்குதல் நடத்த உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலேயே இருவரும் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு விசேட நீதிமன்றத்தின் ஊடாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அரச தரப்பில் சிரேஷ்ட அரச சட்டத்தரணி நயோமி விக்கிரமசிங்கவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சார்பில் சட்டத்தரணிகளான நளினி இளங்கோவன். செல்வராஜா துஷ்யந்தன் ஆகியோரது அனுசரணையில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி தவராசா முன்னிலையானார்.
“ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளும் வழியனுப்பி வைத்துள்ளனர். ஏனையோரின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுவேன்” என்று முருகையா கோமகன் தெரிவித்தார்.