இசைஞானி இளையராஜா பாவம், அவரது வரலாற்று சாதனையான ஆயிரமாவது படம், தோல்விபடமாக அமைந்தது. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்ததற்கான விழாவை பெரிய அளவில் எடுக்க இயக்குனர் பாலா திட்டமிட்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. திரைத்துறையினர் யாரும் இதுப்பற்றி யோசிக்காத நிலையில் தனியார் டிவி இதனை பெரிய அளவில் விழாவாக எடுக்க முயன்றது. ஆனால் அதுவும் இளையராஜாவுக்கும், ராஜா ரசிகர்களுக்கும் பெரிய திருப்தி இல்லாமல் முடிந்ததுதான் பெரும் சோகம்.
வெறுப்பான பாக்யராஜ் : இயக்குனர்கள் மேடையேறும் வைபவத்தில் மேடையேறிய இயக்குனர்களுக்கு அவர்களது படத்தின் ராஜாவின் ஹிட் பாடலை ஒலிக்கவிட்டனர். பாக்யராஜை அழைத்து நாதின் தின்னா… என்று முந்தானை முடிச்சு ஒலிக்க அவரே தலையில் அடித்துக்கொண்டார். முக்கிய இயக்குனர்கள் வராத நிலையில் வந்த சீனியர்களையும் இப்படி அவமானப்படுத்தினால் எப்படி?
அரட்டையான விழா : வந்திருப்பது இளையராஜா ரசிகர்கள், அவர்கள் ராஜா பாடல்களை கேட்டு ரசிக்க தான் வந்திருக்கிறார்கள் என்பதை சிறிதும் உணராத டிவி வழக்கம்போல மேடையில் அரட்டை கச்சேரியை நிகழ்த்தி ரசிகர்களின் பொறுமையை வெகுவாக சோதித்தது. ஆர்க்கெஸ்ட்ராவை சும்மா உட்கார வைத்துவிட்டு கிடார் பிரசன்னா, அப்புறம் ஒரு அமெரிக்க ரிட்டர்ன் என யார் யாரையோ வைத்து தனியாக கச்சேரி நடத்தியது. அவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு ரசிகர்களை வெறுப்பேற்றினார்கள். மொத்தம் 5 மணி நேரம் நிகழ்ந்த நிகழ்வில் பாதியை அரட்டை அடித்தே ரசிகர்களை வெறுப்பேற்றினார்கள்.
ஆறுதல் தந்த எஸ்பிபி : மொத்த விழாவுக்கே ஆறுதலாக அமைந்தது எஸ்பிபியின் போர்ஷன் தான். அவர் பாடியது அதுவரை வெறுத்துபோய் அமர்ந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்தது. வாட் எ வாய்ஸ் சார்? எஸ்பிபிக்கு வயசே ஆகாது போல… அவரது போர்ஷனுக்கு கூட போதுமான நேரம் தரவில்லை. எஸ்பிபி போர்ஷன் முடிந்ததும் ரசிகர்கள் கலைய ஆரம்பித்துவிட்டனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்த கமல் : கமல் மைக் பிடிக்கும்போது மைக் வேலை செய்யவில்லை. இதனை ராஜா சொல்ல ”மைக்கை எங்கே பிடிக்கணும்னு பாடும்போது சொல்லிக்கொடுத்தவரே நீங்க தான். இப்ப பேசும்போதும் மைக்கை எங்கே பிடிக்கணும்னு சொல்லிக்கொடுக்கிறீங்க…” என்று சொல்ல கிளாப்ஸ் அள்ளினார்கள் ரசிகர்கள். இது பாடுவதற்கான மேடை, பேசுவதற்கான மேடை அல்ல” என்று ரசிகர்களை எதிர்பார்ப்பை உணர்ந்து ஒதுங்கினார் கமல்.
ஆர்க்கெஸ்ட்ரா எங்கே? : இளையராஜாவின் இன்னிசை ராகங்களுக்கு முதுகெலும்பாக விளங்கிய அவரது ஆர்க்கெஸ்ட்ரா நபர்களை அடையாளம் காட்டுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இல்லை. எஸ்.பி.பி பேசும்போது புல்லாங்குழல் வாசிக்கும் நபரை உதாரணத்துடன் சுட்டிக்காட்ட விசில் பறந்தது.
முழுக்க முழுக்க டிஆர்பியை மட்டுமே குறி வைத்து நடத்தப்பட்ட விழாவாகத்தான் அமைந்தது இது. இதனால் ரசிகர்களை திருப்திப்படுத்துதலிலும் ஏமாற்றமே மிஞ்சியது.