வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழ்கின்ற மக்கள் தங்களைச் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவதெனத் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று முற்பகல்-11 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணி வரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமின் மகாதேவன் பொதுமண்டபத்தில் நலன்புரி நிலையங்களின் பொது நிர்வாகக் குழுத்தலைவர் எஸ். அன்ரனிக் குயின் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வலி.வடக்கின் மீள் குடியேற்றச் சங்கத் தலைவர் எஸ். சஜீவன், வலி.வடக்கைச் சேர்ந்த 24 நலன்புரி நிலையங்களினதும் தலைவர்கள்,முகாம் மக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படுமென பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்த கருத்துக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதுடன் இந்தக் கருத்தால் முகாம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.
மேலும் இந்தக் கலந்துரையாடலின் போது அடுத்த வாரம் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் கண்ணகி நலன்புரி முகாம் மைதானத்தில் மீள்குடியமர்வை வலியுறுத்தி காலை – 8 மணி முதல் பிற்பகல் – 4 மணி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடாத்துவதெனவும் இந்த உண்ணாவிரதம் முழுமையான மீள் குடியமர்வு இடம்பெறும் வரை வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நிலையங்களின் பொது நிர்வாகக் குழுத் தலைவர் எஸ். அன்ரனிக் குயின் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி எதிர்வரும் ஏப்ரல் மாத காலத்திற்குள் மீள்குடியமர்வு தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலை வழங்காவிடத்து முகாம்களில் குடியமர்ந்துள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து வெள்ளைக் கொடியுடன் தமது சொந்தவிடங்களுக்குச் செல்வதெனவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.