நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டம் நேற்று நான்காவது நாளாகவும் தொடர்ந்தது.
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்த மூன்று கைதிகள் நேற்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் நீண்டக்காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பெண் கைதி உட்பட 14 அரசியல் கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஏழு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு அரசியல் கைதிகளுமே கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு மகசின் சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 15 கைதிகளை நேற்று முன் தினம் சிறைச்சாலைகள் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. குறித்த கைதிகளில் ஒருவரான செல்லத்துரை கிருபானந்தன் என்ற கைதி தான் கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித குற்றச்சாட்டுகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றில் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஆராய்ந்த நீதிமன்றம் அவரை மட்டும் நேற்று முன்தினம் விடுதலை செய்யது.
இந்நிலையில் ஏனைய 14 தமிழ் கைதிகள் உள்ளடங்கலாக அனுராதபுரச் சிறைச்சாலையின் இரண்டு கைதிகளும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மகசின் சிறைச்சாலை கைதிகளான பாலசிங்கம் மனோகரன், யோசப் செபஸ்ரியான், கார்டினல் சிங்கம் தயாபரன் ஆகியோரின் உடல் நிலையானது கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றைய தினம் அவர்கள் சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 2009ஆம்ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முதல் எவ்வித குற்றசாட்டுகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளான யாழ்.கரவெட்டி வடக்கு கரணவாயைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், நாவலப்பிட்டி மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன் சந்திரன் உள்ளிட்ட கைதிகள் தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் தூக்கு தண்டனை கைதிகளை தடுத்து வைக்கும் சிறைச்சாலை அறைக்கு மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.