தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான எமில் காந்தன், இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றில் ஆஜராவாரென, அவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து, கொழும்பு விசேட மேல் நீதிமன்றம், அவர் மீதான சிவப்பு அறிவித்தல்களையும் பிடிவிறாந்துகளையும் மீளப்பெற்றுக்கொண்டது.
எமில் காந்தனுக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளதால், கொழும்பு விசேட நீதிமன்றில் அவர் ஆஜராக முடியாதென, எமில் காந்தனின் வழக்குரைஞர், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தில், நேற்று புதன்கிழமை (24) தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயன்றமை தொடர்பான வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான எமில் காந்தனுக்காக ஆஜரான வழக்குரைஞர் லக்ஷ்மன் பெரேரா, நீதிமன்றத்தில் ஆஜராவது தொடர்பான தமது கட்சிக்காரரின் நிலைப்பாட்டில், மாற்றம் ஏதுமில்லைனெத் தெரிவித்தார்.
இந்த விடயத்தில், சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க, நீதிமன்றம் கால அவகாசம் வழங்க வேண்டும் என, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச வழக்குரைஞர் கேட்டுக்கொண்டார்.
சட்டமா அதிபரின் அபிப்பிராயத்தைப் பெறுவதற்கான வழக்கு, மார்ச் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.