நடிகர் ரஜினிகாந்த் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. மாலையில் அவர் வீடு திரும்பினார்.
ரஜினிகாந்த் ‘கபாலி’ மற்றும் ‘2.0′ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டுள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் தீவிரமாக நடிப்பதாலும், இந்தப் படங்களுக்காக வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாலும் களைப்பு ஏற்பட்டதால் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை ரஜினிகாந்த் சென்னை மியாட் மருத்துவமனைக்குச் சென்றார். அங்குள்ள அறை எண் 101-ல் ரஜினிகாந்துக்கு டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் டாக்டர்கள் குழு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டது.
ரஜினிகாந்துக்கு சாதாரண மருத்துவ பரிசோதனைகள்தான் நடந்தது என்றும் அவர் உடல் நலத்தோடு இருக்கிறார் என்றும் மாலையே வீடு திரும்பி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதுபோலவே சிகிச்சை முடிந்து மாலையில் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
இதுகுறித்து ரஜினியின் வீட்டில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது,
“ரஜினி சாருக்கு எந்த உடல் நலக் கோளாறும் இல்லை. அவர் மிகவும் நலமாக இருக்கிறார். 2011-ம் ஆண்டு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பிறகு அவர் பரிசோதனை எதுவும் செய்யாமல் இருந்தார். இப்போது அந்த வழக்கமான பரிசோதனைதான் நடந்தது. அவர் உடல் நிலை சிறப்பாக இருப்பதாக மருத்துவர் குழு தெரிவித்துள்ளது,” என்றனர்.
2011-ல்…
ரஜினிக்கு கடந்த 2011 ஏப்ரல் மாதம் ‘ராணா’ படப்பிடிப்பில் இருந்தபோது ரஜினிகாந்துக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமச்சந்திரா மருத்துவமனையிலும் சிகிச்சை நடந்தது. டாக்டர்கள் பரிசோதித்து சிறுநீரக பாதிப்பு இருப்பதாக கூறினர்.
இதைதொடர்ந்து சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இருந்து சிகிச்சைப் பெற்றார்.
தீவிர சிகிச்சைக்குப்பிறகு பூரண குணம் அடைந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு கோச்சடையான் மற்றும் லிங்கா படங்களில் நடித்தார்.