ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று யாழில் ஆரம்பம்

ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று (20) யாழ். நகரில் ஆரம்பமாகிறது. “நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளது.

37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10,000க்கும் மேற்பட்ட சாரணர்கள் இதில் பங்குகொள்வர். 05 வெளிநாடுகளிலிருந்து 17 தலைவர்கள், 110 சாரணர்கள் இதில் பங்கு கொள்வரென பிரதான சாரணீய ஆணையாளர் பேராசிரியர் நிமல்டீ சில்வா தெரிவித்தார்.

சமநல, பிதுருதலாகல, ரக்வான, நமுனுகுல என்ற பெயர்களில் நான்கு உப முகாம்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 2000 முதல் 2500 சாரணர்கள் முகாம்களை அமைப்பர்.

சாரணரின் தீப்பாசறை மற்றும் கலைநடன, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். இணை அமைப்பு ஆணையாளர் எஸ்.எப்.எம். மெஹீட் கருத்து தெரிவிக்கையில், மத்திய அரசு, கல்வி அமைச்சு, வடமாகாண சபை, வடமாகாண கல்வி அமைச்சு, முப்படை, பொலிஸ், யாழ். மாநகர சபை உள்ளிட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்பும் கிடைப்பதாக தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் சாரணீய இயக்கம் ஆரம்பமாகி நூறு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நிகழ்வுகளும் ஏற்பாடாகி உள்ளன.

போக்குவரத்துக்காக கொழும்பு கோட்டையிலிருந்து விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts