குருநாகல் மாவட்டத்தில், நோய் காரணமாக உயிரிழந்த தந்தை ஒருவருக்கு எச்ஐவி இருந்ததாக பரவிய வதந்தி காரணமாக, அவரது 6 வயது மகனுக்கு அந்தப் பிரதேசத்தில் உள்ள பல பள்ளிக்கூடங்கள் அனுமதி மறுத்துள்ளன.
பிரதேசத்து கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த சிறுவனின் தாய் கூறினார்.
இந்த நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இந்தப் பிரச்சனையில் தலையிட்டுள்ளது.
நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய், தனது 6 வயது மகனுடன் அங்குள்ள கல்வி அதிகாரிகளின் பணிமனைக்கு முன்பாக அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அந்தப் பிரதேசத்தில் உள்ள கிட்டத்தட்ட 10 பள்ளிக்கூடங்களில் தனது மகனை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்கு முயன்றும் எங்கும் தங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறுகின்றார்.
‘இந்த குளியாபிட்டிய வலயத்தில் எப்படியும் பள்ளிக்கூடமொன்றை வழங்கமுடியாது என்று வலய பணிப்பாளரே கூறுகின்றார். வெளிப் பிரதேசத்துக்கு சென்று பள்ளிக்கூடத்தில் சேர்க்குமாறு தான் அவர்கள் கூறுகின்றார்கள்’ என்றார் அந்தப் பெண்.
‘அமைச்சர் ஒருவரின் கடிதம் ஒன்றை வாங்கிச் சென்றேன். ஆனால், எந்த அமைச்சரின் கடிதத்தாலும் பிரயோஜனம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்’ என்றார் அவர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்தப் பெண்ணின் கணவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் எயிட்ஸ் தொற்றினால் தான் உயிரிழந்தார் என்று ஊர் முழுவதும் பரவியுள்ளது. அதனாலேயே அவரது மகனை எந்தப் பள்ளிக்கூடமும் சேர்க்கவில்லை.
‘எனது கணவர் 3 மாதங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். அவருக்கு எச்ஐவி இருந்ததாக பொய் வதந்தி ஒன்று பரவியிருந்தது. இதனால் எனது மகனுக்கு பாலர் பள்ளியிலேயே பல பிரச்சனைகள் ஏற்பட்டன. என் பிள்ளைக்கு பாரபட்சம் காட்டப்பட்டது. டீச்சர் அருகில் வைத்துதான் என் பிள்ளையை பார்த்துக் கொண்டார்’ என்றார் அந்தத் தாய்.
சிறுவன் முன்னர் பாலர் பள்ளியில் இருந்தபோது, பள்ளி ஆசிரியர் சுகாதார அதிகாரிகள் மூலமாக இரத்தப் பரிசோதனை செய்து சிறுவனுக்கு எச்ஐவி தொற்று ஏதும் இல்லை என்பதை உறுதிசெய்திருக்கிறார்.
ஆனால், அப்படியிருந்தும் பள்ளிக்கூடங்கள் அவரை சேர்த்துக்கொள்ளாமைக்கான காரணம் பற்றி உள்ளூர் கல்வி அதிகாரிகளிடம் வினவியபோது.
‘எச்ஐவி தொற்றுக்கு உள்ளானவர் என்ற கருத்து சமூகத்தில் பரவியிருந்தது. அதனால் தான் அவருக்கு பள்ளிக்கூடம் கிடைக்கவில்லை. எனவே குளியாபிட்டிய வலயத்துக்கு வெளியில் உள்ள பள்ளிக்கூடம் மூலம் தான் இவருக்கு தீர்வு கிடைக்கும் என்று நான் கூறியுள்ளேன்’ என்றார் குளியாப்பிட்டிய கல்வி வலயப் பணிமனை அதிகாரி ஒருவர்.
ஆனால், தனது சொந்த ஊரைவிட்டு வெளியில் சென்று வாழும் அளவுக்கு வசதி இல்லாமல் மிகவும் வறிய நிலையில் வாழ்ந்துவருவதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் கூறினார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து தலையிட்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன் கூறியுள்ளார்.