மீள்குடியேற்றத்தின் பின்னரே சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டுமென்று ஒருமித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையத்தினை சர்வதேச விமான நிலையமாக்குவது குறித்து மக்களின் கருத்தறியும் கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
வலி.வடக்கு மக்கள் தமது காணிகளில் மீளக்குடியமர்வதற்கு உரித்துடையவர்கள் என்ற அடிப்படையில் வடமாகாண ஆளுநர் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன், கடந்த மாதம் 15 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி இராணுவ பாதுகாப்பு தலைமையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் பிரதமர் பொதுமக்களின் காணிகள் கையளிக்கப்பட்டு ஏனைய காணிகளில் தான் இராணுவத்தினர் இருக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.
இவ்வாறு கூறிய நிலையில், வலி.வடக்கு மக்கள் தமது காணிகளில் மீள்குடியமர்ந்த பின்னரே ஏனைய விடயங்கள் பற்றி பேச முடியும்.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக்குவது மற்றும் மயிலிட்டி துறைமுகம் விஸ்தரிப்பு போன்றன பின்னர் ஆராயப்படும்.
மக்கள் தமது சொந்த இடங்களிற்கு செல்ல வேண்டுமென்பது எமது கருத்தாக இருக்க வேண்டும். அதன்பின்னர் அபிவிருத்தி தொடர்பாக என்ன செய்ய வேண்டுமென்று ஆராய வேண்டும்.
மயிலிட்டி துறைமுகத்தினை புனரமைப்புச் செய்வதற்கு ஆராய வேண்டியதுடன், இராணுவத்தினர் அங்கு தொடர்ந்து இருப்பதற்கு இடமளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
10 ஆயிரம் குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியுள்ளார்கள். 1500 குடும்பங்கள் நலன்புரி நிலையத்திலும், 8500 குடும்பங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருக்கின்றார்கள்.
அந்த வகையில், முதலில் வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் அதன்பின்னர், ஏனைய விடயங்கள் பற்றி பேசுவதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.