மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வீதியில் கட்டாக்காலியாக நடமாடிக்கொண்டிருந்த எருமைமாட்டுடன் இந்த வான் மோதுண்டு விபத்துக்குள்ளாகாகியிருப்பதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதில் வவுனியாவைச் சேர்ந்த தெய்வேந்திரம் வாசிகன் (வயது 27), யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாகன சாரதியான சிறீராஜ்குமார் சந்திரராஜ் (வயது 26), யாழ்ப்பாணம் – நெல்லியடியை சேர்ந்த சுந்தரலிங்கம் ராகவேந்தர் (வயது 26), யாழ்ப்பாணம் நீர்வேலியை சேர்ந்த செல்வராசா ஜசோதரன் (வயது 28), விசுவமடு புன்னைநீராவியைச் சேர்ந்த விக்னேஸ்வரராசா ஜசோதரன் (வயது 30), யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த பரமநாதன் லோகநாதன் (வயது 26) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரனையினை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை குறித்த பகுதியிலுள்ள பிரதான வீதியில் மாடுகள் நடமாடுவதால் வாகனங்கள் செல்வதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுவருவதாகவும், இது தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.