யாழ்ப்பாண மாவட்ட கடலோர வான்பரப்பில் கடந்த மூன்று தினங்களாக கிபிர் ரக போர் விமானங்களின் பயணங்களால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
குடா நாட்டு வான்பரப்பில் கடந்த 7 வருடங்களாக கிபிர் ரக போர் விமானங்கள் பறக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக கிபிர் ரக விமானங்கள் பாரிய இரைச்சலுடன் வட்டமிட்டிருக்கின்றமை குடா நாட்டு மக்கள் மத்தியில் பீதியை தோற்றுவித்திருக்கின்றது.
இது குறித்து ஸ்ரீலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் வினவியது.
குறிப்பாக யாழ். மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் கிபிர் விமானங்கள் பறந்ததை ஏற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, கடந்த 3 தினங்களாக விசேட பயிற்சிகளில் விமானப்படை ஈடுபட்டிருந்ததாக கூறினார்.
இதற்கு பொது மக்கள் அஞ்சத்தேவையில்லை என்று ஆறுதல் கூறிய அவர், கடந்த காலங்களைப் போல் அல்லாது, யாழ். குடா நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.