பாடசாலை சிறுவர்களிடையே உள்ள புதிய உணவுப் பழக்கவழக்கங்களின் ஒன்றான, சீனி கலந்த பானங்கள், சுவையூட்டப்பட்ட குளிர்பானப் பொடிகள், சுவையூட்டப்பட்ட பால் பக்கெட்கள் போன்றவற்றின் பயன்பாடானது எதிர்காலத்தில் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் ஏற்படுத்தும் என்று, தேசிய வைத்தியசாலையின் நச்சியல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிளாஸ்டிக் போத்தல்களிலோ அல்லது வேறு சில பொருட்களால் செய்யப்பட்ட பக்கெட்டுகளிலோ, ஸ்ட்ரோ (உறிஞ்சும் குழாய்) இல்லாவிடில் சிறுவர்கள் நேரடியாக அதனை உட்கொள்ளுகின்றனர். இது சுகாதாரமற்ற செயற்பாடாகும் என்று அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
குளிர்பானம் அடைக்கப்பட்டுள்ள பக்கெட்டுகளில் எழுதப்பட்டுள்ள அல்லது அச்சிடப்பட்டுள்ள மை, சில நாட்களுக்குள் உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் குளிர்பானத்துடன் கலந்துவிடும் என்றும் உறிஞ்சும் குழாய் இன்றி அதனை அருந்தும் சிறுவர்களது வாயில் அந்த மை ஒட்டிக்கொள்ளும் என்றும் இது சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது.
சில சுவையூட்டப்பட்ட பால் மற்றும் குளிர்பானங்களை குடித்த தங்களது குழந்தைகளுக்கு வாந்திபேதி ஏற்பட்டு விட்டதாக, பெற்றோரால் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.