வடமாகாண முதலமைச்சர் ஆளுனர் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு எதிரான ஆணை வழக்கை யாழ் மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் கீழ் வரும் வைத்தியசாலைகள், அலுவலகங்கள் என்பவற்றிற்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் கோரப்பட்ட கேள்விப் பத்திரம் சம்பந்தமான ஆணை வழக்கை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்துள்ளார்.

இந்தக் கேள்விப்பத்திர கோரலுக்காக விண்ணப்பம் செய்திருந்த பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்று, தனக்கு வரவேண்டிய கேள்விப்பத்திர கோரலை கவனத்தில் எடுக்காமல், பாதுகாப்பு சேவை வழங்கும் இன்னுமொரு நிறுவனத்திற்கு வழக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, இந்தக் கேள்விப்பத்தி கோரல் தெரிவுக்கு எதிராக யாழ் மல் நீதிமன்றத்தில் பிணை வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்தப் பிணை வழக்கின் மனுதாரர், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுனர், வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரை எதிர் மனுதாரராகக் குறிப்பிட்டு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்தக் கேள்விப் பத்திரம் தொடர்பாக வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எடுத்த தீர்மானம் சட்ட வலுவற்றது, அது சட்டத்திற்கு முரணானது, நீதிப்பிறழ்வை ஏற்படு;த்தியள்ளது என்ற காரணத்தினால் அதனை இடைநிறுத்த வேண்டும். அதனை ரத்துச் செய்து ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் அந்தக் கேள்விப்பத்திரம் ஊடான பாதுகாப்பு சேவையை தமது நிறுவனத்திற்கு வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் தனது மனுவில் கோரியிருந்தார்.

மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியன் விசாரணையின் முடிவில் வழக்கைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளதாவது:

கேள்விப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்களைக் கோரி, அந்த விண்ணப்பங்களில் இருந்து சரியானவற்றைத் தெரிவு செய்வதென்பது, ஒரு நிர்வாகச் செயற்பாடாகும். அதில் தீய எண்ணத்துடன் செயற்பட்டிருந்தல், சட்ட வரம்பை மீறிச் செயற்பட்டிருத்தல் அல்லது அங்கு அதிகார துஸ்பிரயோகம் செய்திருத்தல் ஆகிய மூன்று காரணங்களின் அடிப்படையிலேயே, அந்த நிர்வாகச் செயற்பாட்டை நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்த முடியும். இந்த மூன்று காரணங்கள் இல்லாவிட்டால், நிர்வாகச் செயற்பாடுகளில் அல்லது நிர்வாகம் சம்பந்தப்பட்ட தீர்மானங்களில் மேல் நீதிமன்றம் தலையீடு செய்யமாட்டாது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள வடமாகாண முதாமைச்சர், வடமாகாண ஆளுனர், வடமாகாண சுகாதார சேவைகள் அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் மனுதாரருக்கு அந்த பாதுகாப்பு சேவைக்கான பொறுப்பு கிடைக்கக் கூடாது என்ற தீய எண்ணத்தைக் கொண்டு செயற்பட்டிருந்தார்கள் என்பதை மனுதாரர் நிரூபிக்கத் தவறிவிட்டார்.

இந்த எதிர் மனுதாரர்கள் கேள்விப்பத்திரம் தொடர்பான தெரிவில், என்னென்ன வகையில் அதிகார எல்லையை மீறிச் செயற்பட்டிருந்தார்கள் என்பதையோ அல்லது அவர்கள் எந்தெந்த வகைகளில் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதையோ மனுதாரர் நிரூபிக்கத் தவறிவிட்டார்.

ஆணை வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரச உயர் மட்ட அதிகாரிகள் அல்லது அமைச்சர்களின் தீர்மானமானது தீய எண்ணத்தைக் கொண்டுள்ளது, சட்ட பிழையைக் கெண்டுள்ளது அல்லது அதிகார எல்லையை மீறியும் அதிகார துஸ்பிரயோகம் செய்தும் முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது என்பதுடன், விதிவிலக்கான ஏனைய காரணங்களையும் மனுதாரர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும். எனவே, தேவையற்ற விதத்தில் வடமாகாண சபையின் செயற்பாடுகளில் யாழ் மேல் நீதிமன்றம் தலையிட முடியாது. அவர்கள் செய்யும் அனைத்துச் செயற்பாடுகுளையும் நீதிமன்றம் கேள்விக்கு உட்படுத்திக்கொண்டிருக்க முடியாது.

மாகாண சபையைச் சேர்ந்தவர்கள் அதிகார அத்துமீறல்கள், அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றைப் புரிந்து ஒரு முடிவெடுத்துள்ளார்கள் என கருதினால், வடமாகாண மேல் நீதிமன்றமாகிய யாழ் மேல் நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக ஆணை வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்று மாகாண சபைகளை உருவாக்கிய 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஒரு பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்விப் பத்திரம் தொடர்பாக எடுக்கப்படுகின்ற தீர்மானமானது, மாகாண சபையின் நிர்வாக நிகழ்வுகளுடன் தொடர்புடையது. அது மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு உட்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரருக்குக் கிடைக்க வேண்டிய தெரிவை இல்லாமல் செய்து இன்னுமொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை மனுதாரர் எண்பிக்கத் தவறிவிட்டடார்.

சட்டத்திற்கு முரணான வகையில் செயற்பட்டு சட்டப் பிழைகள் விட்டிருந்தால், சட்ட வரம்பை மீறியிருந்தால் அல்லது சட்டத்தை துஸ் பிரயோகம் செய்திருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆணை வழக்கின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால், இங்கு முதலமமைச்சர் என்ன பிழைவிட்டார், ஆளுனர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோர் என்ன பிழை விட்டனர் அல்லது வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்ன பிழை விட்டார் என்பது குறிப்பிடப்படவில்லை. அத்துடன் இத்தகைய பிழைகளை விட்டு அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதை மனுதாரர் எண்பிக்கத் தவறிவிட்டார்.

மாகாண சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட வகையில் இந்த கேள்விப்பத்திரம் தொடர்பான தெரிவு இடம்பெற்றிருக்கின்றது. எனவே, அந்தத் தீர்மானத்தில் நீதிமன்றம் தலையீடு செய்ய முடியாது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கின்றது.

Related Posts