சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச உள்ளிட்ட நால்வரின் பிணை மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடந்ததாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட யோஷித ராஜபக்ச உள்ளிட்ட நால்வர் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் கடுவலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிணை மனு கோரி இவர்கள் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்த மனுக்கள் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே குறித்த மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதாக அறிவித்த கொழும்பு உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, யோஷித ராஜபக்சவின் பிணை மனு மீதான விசாரணையை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நீதிமன்றத்திற்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது.