உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருக்கும் நடேஸ்வரக் கல்லூரியை விடுவித்து மீண்டும் இயங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பாடசாலைக்கு அண்மையாக இருக்கும் பகுதிகளும் விடுவிக்கப்படவுள்ளன என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். இதன்போது அவர் 25 வருடங்களின் பின்னர் நடேஸ்வரக் கல்லூரி அதன் அதிபரிடம் ஒப்படைப்பார் எனத் தெரிகிறது.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜனாதிபதி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கும் பொது மக்களின் காணிகள் விடுவித்தார். இதன்போது அப்பகுதியில் உள்ள ஆலயங்கள், தேவாலயங்கள், பாடசாலைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்தே இப்போது நடேஸ்வரக் கல்லூரியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இன்று புதன்கிழமை பலாலியில் நடக்கவுள்ள உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பான கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகின்றது.