“வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கியுள்ள வாக்குறுதிக்கேற்ப தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படுவார் என்று நாம் நம்புகின்றோம்.”- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும் தான் அயராது பாடுபடுவார் என்று வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ்க் கட்சிகளுடனும் இணைந்து மக்களுக்காக சேவையாற்றுவதே தனது இலக்காகும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்.
வடக்கு மாகாணசபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் உள்ளது. இந்நிலையில், வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநரின் மேற்படி கருத்துகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் தலைவர் இரா.சம்பந்தனிடம் தமிழ்ப் பத்திரிகை ஒன்று வினவியுள்ளது. இதன்போது அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:-
“வடக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே பதவியேற்றுள்ளார். இவரை நாம் வரவேற்கின்றோம். இவர் முற்போக்குவாதி. இவர் ஏற்கனவே முக்கிய பதவிகளில் இருந்தவர். நீண்டகாலமாக இவரை எமக்குத் தெரியும்.
இவர் வழங்கியுள்ள வாக்குறுதிக்கேற்ப வடக்கு மாகாண முதலமைச்சருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையுடனும் இவர் இணைந்து செயற்படுவார் என்று நாம் நம்புகின்றோம்” – என்று கூறியுள்ளார்.