ஆறு வார குழந்தையாக இருந்த போது பிரித்தானிய தம்பதிகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பெண், 28 வயதில் மீண்டும் தாயாருடன் இணைந்து கொண்டார்.
இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார். அன்று முதல் அந்த குழந்தை பிரித்தானியாவில் வளர்ந்து வந்தது. ரொஷானி என்ற இந்த பெண் குழந்தை தற்போது வயது வந்த இளம் பெண்.
பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியலிட்டி ஷோவில் கலந்து கொண்ட இந்த பெண் அங்கு பிரபலமானார். ரொஷானியை வளர்த்த பிரித்தானிய வளர்ப்பு தாய் 2010ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார்.
இறப்பதற்கு முன்னர் அவர் ரொஷானியை பெற்ற தாய் பற்றிய விபரங்களை அவருக்கு வழங்கியுள்ளார். வயலட் என்ற இந்த பிரித்தானிய வளர்ப்பு தாய், இலங்கைக்கு சென்று பெற்ற தாயை பார்க்குமாறு இறப்பதற்கு முன்னர் கூறியுள்ளார். வளர்ப்பு தாய் இறந்த பின்னர், ரொஷானி தனது பெற்ற தாயை தேட ஆரம்பித்தார். எனினும் அது இலகுவான காரியமாக இருக்கவில்லை.
இருப்பினும்,ரொஷானி முயற்சியை கைவிடாது தன்னை பெற்ற தாய் இலங்கையில் நல்லபடியாக வாழ்ந்து வருவதாக அறிந்து கொண்டார். இதனையடுத்து, அவர் தனது பிரித்தானிய வளர்ப்பு தந்தை, சகோதரன் மற்றும் காதலனுடன் இலங்கைக்கு வந்து தான் பிறந்த வீட்டுக்குச் சென்றுள்ளார்.
பெற்ற தாயிடம் இருந்து 6 வாரங்களில் பிரிந்த ரொஷானிக்கு தற்போது 28 வயதாகிறது. அவர் தன் பெற்ற தாயை பார்த்து கட்டியணைத்து உணர்ச்சிப்பூர்வமாக தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.