Ad Widget

ஐங்கரநேசன் ஒரு பனங்காட்டு நரி-சுமந்திரன் தரப்பிற்கு முதல்வர் பதிலடி(காணொளி)

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நேற்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது அழைப்பின் பேரில் வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டார்.

இந்த விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் நேற்றைய தினம் சுமந்திரன் தரப்பு உறுப்பினர்கள் சிலரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் மிக காட்டமாக பதிலளித்திருந்தார்.

அதன்போது அவர் ஐங்கரநேசன் அவர்கள் சிறப்பாக பணியாற்றிவரும் ஒரு அமைச்சர் என்றும் ”கானிதரும் மரங்களே கரவான்களின் கற்கள் பதம்பார்க்கும்” இருந்தாலும் அவர் ஒரு பனங்காட்டு நரி இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாதவர் என்றும் அவர் சதா மக்கள் நலன்பேணும் பணிகளையே செய்து வருகின்றார் என்றும்கூறினார்.

அவரது உரையின் முழுமையான பகுதி

விழாவின் தலைவர் அவர்களே, சிறப்பு
விருந்தினர்களே, கௌரவ விருந்தினர்களே, அலுவலர்களே, சகோதர சகோதரிகளே!

முழங்காவில் பேரூந்து நிலைய புதிய கட்டடம் அழகுற அமைக்கப்பட்டு அதனை இந்த நன்நாளில் திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். இன்று புதன் கிழமை. எனது காரியாலயத்தில் மக்கள் சந்திப்பு நடைபெறும் நாள். வடமாகாணத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வந்து நூற்றுக் கணக்கான மக்கள் என்னைச் சந்திப்பதற்குக் காரியாலயத்தில் காத்திருப்பார்கள்.

இதனால்த் தான் நான் புதன் கிழமைகளில் பொது நிகழ்வுகளை தவிர்த்து வருவதுண்டு. எனினும் போக்குவரத்து அமைச்சர் கௌரவ டெனீஸ்வரன் அவர்களின் அன்புக் கட்டளையை மறுக்க முடியாது இன்று இந்தத் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்திருக்கின்றேன்.

மிக நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி ஊடாக மன்னார் வரை பிரயாணத்தை மேற்கொள்ளுகின்ற பிரயாணிகளின் இடைத்தங்கல் நிலையமாக முழங்காவில்ப் பிரதேசம் அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் நோக்கி பிரயாணிக்கின்ற மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கேரதீவு வரை அந்தக் காலத்தில் முதலாவது பஸ் வண்டி எடுப்பர். பின்னர் கேரதீவு தொடக்கம் சங்குபிட்டி வரை படகுச்சேவையில் பயணிப்பர். அதன் பின்னர் சங்குப்பிட்டியில் இருந்து மன்னார் வரை பஸ் சேவை நடைபெறும்.

இந்த பஸ் பிரயாணம் இடைத்தங்கலாக முழங்காவிலில் நிறுத்தப்படுகின்ற போது பிரயாணிகள் அனைவரும் இறங்கி முகம் கைகால் கழுவி பிள்ளையார் கோவிலைத் தரிசித்துப் பின்னர் இங்கிருந்த செட்டியார் கடையில் தேநீர் அருந்தி பிரயாணத்தைத் தொடர்வது வழக்கம் என்று கூறக் கேட்டுள்ளேன்.

அதாவது நான் சாவகச்சேரியில் மாவட்ட நீதிபதியாக 1980, 81ம் வருடங்களில் இருந்த போது நடைபெற்றவற்றைக் கூறுகின்றேன். அப்போது திங்கள் வெள்ளிக்கிழமைகளில் அரச உத்தியோகத்தர்களின் படையெடுப்பு பிரமாதமாக இருக்கும். பஸ்களில் அவர்களே நிரம்பி வழிவார்கள். அந்தக்காலத்தில் பிரத்தியேக பஸ் சேவைகள் அவ்வளவாக இருந்ததில்லை.

ஒரு சில வான்கள் மட்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. விடியற் காலை 5.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்ற உத்தியோகத்தர்கள் 9 மணிக்கு மன்னாரை வந்து அடைந்துவிட வேண்டும். நல்ல சாரதிகளாக இருந்தால் நேரத்திற்குப் போய்ச் சேர்வார்கள் இல்லையென்றால் தாமதப்பட்டு அதனால் பிரச்சனைகளை எதிர்நோக்க இருக்கும். மக்கள் இவற்றைக் கூறக் கேட்டுள்ளேன்.

தற்போது A32 வழியான பிரயாணம் மிக இலகுவாக்கப்பட்டுள்ளது. தாம்போதிப் பாலம் அமைக்கப்பட்டு வாகனத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் வரை தொடர் பிரயாணம் செய்ய முடிகின்றது. வீதிகள் முழுமையாக காப்பெற் இடப்பட்டு 2 மணித்தியாலங்களில் 100 கிலோ மீற்றருக்கு மேற்பட்ட தூரம் பிரயாணத்தை முடிக்கக் கூடிய நிலை தோன்றியுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் இன்னுஞ் சில பதனிடப்பட வேண்டிய வேலைகள் மிஞ்சியிருக்கின்றன.

தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு நிம்மதி அடையும் அதேவேளை அண்மையில் சில வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையையும் கருத்திற் கொள்ளல் அவசியம். வீதிகள் திருத்தப்படாத நிலையில் குன்றும் குழியுமாக 80 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்தைக் கடக்க வேண்டிய காலத்தில் இ.போ.ச பஸ் சேவை இவ் வீதிகள் ஊடாக நடைபெறவில்லை என்று அறிகின்றேன். அந்த நேரத்தில் முற்று முழுதாக இச் சேவையைப் பிரத்தியேக பஸ்கள் மூலமே நிறைவேற்றக்கூடியதாக இருந்தது. இதற்கு இரண்டு காரணங்களை பிரதானமாகக் கூறுவார்கள்.

1. ஒன்று சாலைகளில் இருந்த இ.போ.ச பஸ் வண்டிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தமை.
2. வீதி சீரின்மையால் இருக்கின்ற பஸ்களையும் உடைத்துவிட்டால் பின்னர் குறுந்தூர சேவைகளைக் கூட ஆற்ற முடியாது போய்விடும் என்ற பயம்.

பிரத்தியேக பஸ்கள் தேவையான அளவு சேவையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்தமையால் அவர்கள் அச் சேவையை திறம்பட நடாத்த முடிந்தது என்று அறிகின்றேன். அக்காலத்தில் அவர்களின் சேவை பெரிதும் பாராட்டப்பட்டது என்றும் அறிகின்றேன். ஒருவேளை அரசாங்கம் அதனது சேவைகளைக் குறைத்து தனியார் துறையினருக்குக் கூடிய சலுகைகளை அரசியல் காரணங்களுக்காகக் கொடுத்து வந்ததோ நான் அறியேன்.

ஆனால் அண்மைக்காலமாக பிரத்தியேக பஸ் உரிமையாளர்களுக்கும் இ.போ.ச பஸ் சாரதிகளுக்குமிடையே தினமும் ஒவ்வொரு இடங்களில் வாக்குவாதங்கள் சண்டைகள் நடைபெறுவதை புதினப்பத்திரிகைகள் வாயிலாக அறிகின்றோம். இது மனதிற்கு வேதனையைத் தருகின்ற ஒரு விடயமாக அமைகின்றது. பிரத்தியேக பஸ் வண்டிகள் ஆயினுஞ் சரி இ.போ.ச பஸ் வண்டிகள் ஆயினுஞ் சரி நாம் பொது மக்களுக்கும் பிரயாணிகளுக்கும் மிகச் சிறந்ததும் சௌகரியமானதுமான ஒரு சேவையை வழங்கவே செயற்படுகின்றோம் என்ற மனப்பாங்கு மேலோங்க வேண்டும்.

எமது கடமை என்ன என்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தோமானால் எந்தச் சவால்களையுந் சமாளித்துக் கொள்ளலாம். அதை விட்டு சுயநலத்துடன் நடக்க முற்பட்டால், அதாவது கடமையை மறந்து சில்லறை கிளுகிளுப்புக்களுக்கு இடங் கொடுத்தால், கண்ணீருங் கம்பலையுந்தான் மிஞ்சும்.

அண்மையில் இரண்டு சாரதிகளுக்கிடையே ஏற்பட்ட ஒரு போட்டியானது ஒன்றும் தெரியாத ஒரு 6 வயதுப் பாலகனை பாடசாலை விட்டு வீட்டுக்கு திருப்புகின்ற நேரம் மோதித்தள்ளி உயிர்துறக்க வைத்துள்ளமை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதனை ஒவ்வொரு சாரதியுந் தமது மனதில் ஒரு பாடமாகப் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் போட்டிகளும் பொறாமைகளும் ஒன்றுந் தெரியாத ஒரு பாலகனின் உயிரைப் பறித்ததுடன் அவனின் பெற்றோர்களை நடைப்பிணங்களாக மாற்றிவிட்ட ஒரு கொடூரச் செயலாக இதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது எமக்கு நடவாது என்று எவரும் நினைக்கக் கூடாது. குடித்து விட்டு வண்டி ஓட்டுதல் போட்டிக்கு வண்டி ஓட்டுதல், தன்னைப் பறைசாற்ற வண்டியோட்டுதல் போன்ற அனைத்தும் ஏதாவது ஒரு தருணத்தில் கவனக் குறைவை ஏற்படுத்தும். உங்கள் கவனக் குறைவு வண்டிக்கும் அதில் பயணிப்பவர்களுக்கும் தெருவில் பயணிப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள். காலனின் கைப்பொம்மையாகி விடாதீர்கள்.

அண்மையில் உங்களுடைய சேவைகள் தொடர்பான நேர அட்டவணை இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலர்கள் மற்றும் பிரத்தியேக பஸ் உரிமையாளர்களுடன் கலந்து பேசி எமது கௌரவ அமைச்சர் டெனீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டதாக அறிகின்றேன். எனவே இரண்டு பக்கத்தாரும் மிகவும் அவதானமாகவும் பற்றுறுதியுடனும் சகோதரத்துவத்துடனும் உங்கள் அரிய சேவையை மக்களுக்கு வழங்க வேண்டும் என இச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.

நீங்கள் இவ் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு உங்கள் வாகனங்களை அல்லது பஸ் வண்டிகளை வீதி ஒழுங்கிற்கமைய நிதானமாகச் செலுத்தத் தவறுகி;ன்ற பட்சத்தில் உங்கள் சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பஸ் சேவையின் வழித்தட அனுமதிகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுவன என்ற விடயத்தையும் உங்களுக்கு இறுக்கமாக இத்தருணத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

இன்று திறந்து வைக்கப்படுகின்ற இந்த அழகிய பேரூந்து நிலையம் இப்பகுதி மக்கள் மிகச் சௌகரியமாகத் தங்கியிருந்து தங்கள் தங்கள் பஸ் சேவைகளைப் பெற்றுச் செல்லக் கூடியதாக அமைந்திருப்பது மகிழ்வைத்தருகின்றது. இதனை அசுத்தப்படுத்தாமல் இதன் இன்றைய அழகை ஒரு துளியளவேனும் குன்றிவிடாது தடுக்க நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இதனைப் பராமரிக்க வேண்டும். வெள்ளைக்காரர் காலத்தில் நாம் எமது சுற்றுச் சூழல் பற்றிப் போதிய கவனஞ் செலுத்தினோம். பின்னர் எது நடந்தாலும் எமக்கென்ன என்று இருந்து விட்டோம்.

அதன் பின்னர் சில காலம் எமது சுற்றுச்சூழல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. 2009ம் ஆண்டின் பின்னர் திரும்பவும் பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலமைக்கு எங்களைக் கொண்டுவந்துள்ளது. கவனக்குறைவை, சுயநலத்தை எங்கும் பார்க்கக்கூடியதாக உள்ளது. நாம் நிதானமாக எமது வாழ்க்கையை வழிநடத்த முன்வரவேண்டும். வடமாகாணசபை உங்கள் சபை. உங்களை ஒன்றுபடுத்தி உலகத்திற்கு எடுத்துக் காட்டும் ஒரு நிறுவனம். சுற்றுச்சூழல், மக்கள் நலம், முன்னேற்றம் என்று பலதையும் இனி மக்களே சிந்தித்துச் செயலாற்ற நீங்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

வடமாகாணத்தில் இன்று பல அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். நீண்டகாலப் போரின் நிமித்தம் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார உதவிகள், வீடு, தொழில் முயற்சி என பல தரப்பட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. இந்நிலையிலும் உங்களது பஸ்தரிப்பிடத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மிகப் பெரியதொரு நிதி ஒதுக்கீட்டில் இந்த பஸ் நிலையம் அமைத்துத் தரப்பட்டுள்ளது. எம்மிடையே காணப்படுகின்ற மிகப் பெரியதொரு பலவீனம் எமது தனிப்பட்ட சொத்துக்களாயின் மிகவும் அவதானமாகவும் அதன் அழகு குன்றாமலும் பாவிப்போம்.

அதே நேரத்தில் அது ஒரு அரச சொத்தாகவோ அல்லது மாகாணத்துக்குரிய சொத்தாகவோ இருப்பின் அதனை நாம் சீராக பராமரிக்காமல் அழியவிட்டுவிடுகின்ற ஒரு தன்மை காணப்படுகின்றது. இந்த நிலை உடனடியாக மாற்றப்படல் வேண்டும். அரச சொத்துக்களும் எமது கரிசனைக்கு உட்பட வேண்டிய சொத்துக்களே. இச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுகின்ற போது நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் நாங்களே. எனவே பஸ் நிலையங்களில் பீடி, சிகரெட் குடித்தல், வெற்றிலை பாவித்து விட்டு எச்சில் உமிழ்தல், சமூக விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தல் போன்ற தீய செயல்களை நிறுத்துவது மட்டுமன்றி அவற்றில் ஈடுபடுகின்றவர்களை நீங்கள் தற்செயலாக அடையாளம் கண்டால்க் கூட அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவி புரிய வேண்டும்.

பஸ்வண்டிகளைப் பராமரிப்பவர்கள், ஓட்டுபவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். எமது பணம் நாளுக்கு நாள் அதன் பெறுமதியை இழந்து வருகின்றது. பஸ்வண்டிகளைக் கவனமாகப் பாவிக்காது விட்டாலோ அதனை நாளாந்தம் பரிசோதனை செய்து ஆவன செய்யாது விட்டாலோ, சுத்தமாக வைத்திருக்கத் தவறினாலோ அதனால் ஏற்படும் பாரிய விளைவை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பஸ்வண்டிகளின் உதிரிப் பாகங்களின் விலை மிக மிக அதிகம். பணம் கிடைக்காத வரையில் அந்த பஸ் வண்டி தரித்து நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படும். இது பிரயாணிகளையே பாதிக்கும். இவற்றையெல்லாம் நாங்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அன்பார்ந்த பொது மக்களே!

முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த விவசாய பூமி. இங்குள்ள ஒவ்வொரு குழி நிலமும் விவசாயத்திற்கு உட்படுத்தப்படல் வேண்டும். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்று படையினர் வசம் போய் முந்திரிகைத் தோட்டமாகவும் பழத் தோட்டங்களாகவும் காணப்படுகின்றன. அவற்றின் பயனை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். ஆனால் எம்மவரோ இருக்கின்ற நிலங்களைக் கூட சரியாகப் பயன்படுத்தாது பற்றைக் காடுகளாக படரவிட்டு விட்டுச் சோம்பிக் கிடக்கின்றார்கள். இந்நிலை மாற்றப்படல் வேண்டும்.

இன்று எமது விவசாய அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன் அவர்கள் விவசாய உற்பத்திகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயற்பட்டு அரிய பல திட்டங்களை உருவாக்கி வருகின்றார். கனிதரும் மரங்களையே கரவானவர்களின் கற்கள் பதம்பார்க்கும். அதனால் அவருக்கு எதிராகக் கற்கள் வீசப்படுவதை எதிர்பார்க்கத்தான் வேண்டும். எனினும் அமைச்சர் ஐங்கரநேசனும் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சமாட்டார். சதா மக்கள் நலம் பேணும் வேலைகளிலேயே மூழ்கி நிற்கும் ஒரு அமைச்சர். அவரின் வழிகாட்டலின் கீழ் நீங்கள் அனைவரும் இணைந்து கொண்டு விவசாய உள்ளீடுகளைப் பெருக்கப் பாடுபட வேண்டும்.

கௌரவ டெனீஸ்வரனுடன் சேர்ந்து கொண்டு மீன்பிடி, போக்குவரத்து மேலும் பலவித மக்கள் நலங் கருதிய கைங்கரியங்களில் ஈடுபட்டு சமூக மறுமலர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும். கௌரவ அமைச்சர் குருகுலராஜா அவர்கள் எங்கள் பிள்ளைகளின் கல்வியைப் பேணிப்பாதுகாப்பார். கௌரவ அமைச்சர் ச.சத்தியலிங்கம் அவர்கள் எம்மைச் சுத்தத்துடனும் சுகாதாரத்துடனும் வாழ வழிவகுப்பார். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டு எமது வளங்களை முறையாக பயன்படுத்துவோமாயின் எமது எதிர்காலம் சிறப்புற அமையும் எனக்கூறி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.

நன்றி வணக்கம்

Related Posts