யாழ்ப்பாணம் மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவைச் இராணுவ கோப்ரல் ஒருவருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார்.
அத்துடன் 20 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டப் பணம் செலுத்தத் தவறினால் 2 வருடங்கள் கடூழியச் சிறை வாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2002ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 14 ஆம் திகதி சித்திரை புதுவருட தினத்தன்று மீசாலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் சந்திரசிறி என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை, இராணுவ சிப்பாய் காவிந்த என்பவரைத் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி கொலை முயற்சி புரிந்தமை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு கனிஷ்ட அதிகாரி லான்ஸ் கோப்ரல் எதிரிபால என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரால் யாழ் மேல் நீதிமன்றில் கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சாட்சியமளித்த காயமடைந்த இராணுவ சிப்பாயாகிய காவிந்த, 14.4.2002 ஆம் திகதி புதுவருட தினத்தன்று இரவு 11.45இற்கும் 12 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எதிரியான லான்ஸ் கோப்ரல் எதிரிபால என் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனால் எனக்கு காலில் காயமேற்பட்டது. அதன் பின்னர் எதிரி இராணுவ சிப்பாய் சந்திரசிறி மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அதனால் காயமடைந்த சந்திரசிறி பின்னர் இறந்து போனார். இந்தத் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை என் கண்களால் கண்டேன் என தெரிவித்தார்.
சரத் விஜயசிறி என்ற இன்னுமொரு இராணுவ சிப்பாய் சாட்சியமளிக்கையில் –
சம்பவம் நடைபெற்றபோது நான் நித்திரையில் இருந்தேன். துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தபோது, எதிரியான லான்ஸ் கோப்ரல் எதிரிவீர என்னை நோக்கி ரீ56 ரக துப்பாக்கியை நீட்டியவாறு நின்றிருந்தார்.
அதனைக் கண்டு, நான் எழ முயன்ற போது, என்னை நோக்கி துப்பாக்கியால் குறிவைத்த வண்ணம், நீ நல்லவன். தப்பி ஓடு என கூறினார். அவருடைய கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து அப்போது, வெடி மருந்து மணம் வீசியது என தெரிவித்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் –
இந்த சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதன் பின்னர், எதிரியைக் கைது செய்து, அவரிடமிருந்த ரீ56 ரக துப்பாக்கியைக் கைப்பற்றினேன். அதன் பின்னர், எதிரியையும் அவர் வசமிருந்த துப்பாக்கியையும் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தினேன் என்றார். இந்தச் சம்பவத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் இராணுவ சிப்பாய் சந்திரசிறியின் மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி உருத்திர பசுபதி மயூரதன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
இந்தச் சம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் இராணுவ சிப்பாய் சரத் சந்திரசிறிக்கு காயம் ஏற்படுத்தப்பட்டதாக, இராணுவ வைத்திய அதிகாரி டாக்டர் மேஜர் முகமட் சரீப் நியாஸ் தனது சாட்சியத்திலல் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் புலனாய்வு விசாரணைகளை நடத்திய பொலிஸ் புலனாய்வு பெறுப்பதிகாரி அந்த இடத்தில் இரத்தக் கறைகள் இருந்ததாகவும் அங்கிருந்து நான்கு வெற்றுத் தோட்டக்கள் கைப்பற்றப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட வெற்றுத் தோட்டாக்களை அடையாள் காட்டி சாட்சியமளித்தார்.
அரச இராணுவ பகுப்பாய்வாளர் பத்திரனலாகே காமினி மடவல நீதிமன்றில் சாட்சியமளித்தபோது, அவரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வு குறித்த பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பகுப்பாய்வுக்காகத் தன்னிடம் கையளிக்கப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கியில் இருந்தே தனக்குக் கையளிக்கப்பட்ட நான்கு வெற்றுத் தோட்டாக்களுக்குரிய துப்பாக்கிக் குண்டுகள் புறப்பட்டுச் சென்றன என்பதை உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.
எதிரியான லான்ஸ் கோப்ரல் எதிரிபாலவுக்கு அரச கடமைக்காக துப்பாக்கி வழங்கிய இராணுவ அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார். அவர் தனது சாட்சியத்தில், குறிப்பிட்ட இலக்கம் கொண்ட ரீ 56 ரக துப்பாக்கியை 2000 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி கையளித்ததாகவும், அதனை அவர் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தி ஆயுதக் கிடங்கின் ஆவணப் பட்டியலில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறி, அதற்கான ஆதாரமாக அந்தப் பட்டியலை நீதிமன்றத்தில் சான்றாக சமர்ப்பித்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்ட எதிரி லான்ஸ் கோப்ரல் எதிரிவீரவும் சாட்சியமளித்தார்.
“சம்பவ தினத்தன்று நான் மதுபோதையில் இருந்தேன். நான் யார் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை. அன்றிரவு சாமம் 2 மணிக்குப் பின்னர் நான் பொலிஸ் நிலைய கைதிக்கூண்டில் இருப்பது எனக்குத் தெரிந்தது. கடமைக்காக எனக்கு எதுவித ஆயுதமும் யாரும் தரவில்லை” என நம்பகத்தன்மையற்ற வகையில் கூறினார்.
இந்த வழக்கு தொடர்பான சம்பவத்தில், துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெறுவதற்கு 5, 10 நிமிடங்களுக்கு முன்னர், எதிரிக்கும் இறந்தவருக்கும் இடையில் திடீர்ச் சண்டையொன்ற எற்பட்டிருந்தது என்பது வழக்கு விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரைக் கொலை செய்வதற்கான எண்ணம் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
இதனால் முதலாது குற்றச்சாட்டை நீதிபதி கைமோசக் கொலைக் குற்றச்சாட்டாக மாற்றம் செய்தார். விசாரணையின் முடிவில், கைமோசக் கொலைக் குற்றச்சாட்டு, கொலை முயற்சிக் குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றங்களிலும் எதிரியை குற்றவாளி என நீதிமன்றம் கண்டது.
அப்போது, எதிரியை நோக்கி ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, கூறுவதற்கு எதுவுமில்லை என எதிரி பதிலளித்தார். இதனையடுத்து நீதிபதி இளஞ்செழியன் தனது தண்டனைத் தீர்ப்பில் தெரிவித்ததாவது:-
இந்த வழக்கில் எதிரியாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ லான்ஸ் கோப்ரல் எதிரிவீர தானாகவே விரும்பி மது அருந்தியது அவருடைய தவறு. இந்த இராணுவ வீரர், கடமை புரியும் இராணுவ முகாமில் மது போதையில் ஆபத்தான ஆயுதமாகிய துப்பாக்கியை ஏந்தி துப்பாக்கிப் பிரயோகம் செய்திருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதனை பாரதூரமான ஒரு செயலாக நீதிமன்றம் கருதுகின்ற போதிலும், குற்றவாளியாகிய எதிரிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது.
இந்தத் தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறினால், ஒரு வருடம் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதேபோன்று, சரத் விஜயசிறி என்ற இராணுவ வீரர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு 5 ஆண்டுகள் கடூழியச் சிறையும் 10 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்படுகின்றது.
தண்டப் பணத்தைக் கட்டத் தவறினால் ஒரு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில் எதிரியின் செயற்பாட்டினால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பதனால், எதிரி 2 தண்டனைகளுக்கும் மொத்தமாக 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். அத்துடன் மொத்மதாக 20 ஆயிரம் ரூபத தண்டமாகச் செலுத்த வேண்டும். தண்டப் பணம் செலுத்தத் தவறினால் இரண்டு ஆண்டுகள் கடூழியச் சிறைவாசம் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டவரும், நீதிமன்றத் தண்டனை பெற்றவரும் வவுனியா உலுக்குளம் என்ற ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.