பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க த.தே.கூ ஆதரவு

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பின் உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை(09) நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த பல பெண்கள், தமது இன விடுதலைக்காகப் போராடினர். வடக்கு, கிழக்கிலுள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும். இன விடுதலைக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

50 சதவீதத்துக்கு மேல் பெண்கள் உள்ள இந்த நாட்டில், உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நாம் ஆதரவாக உள்ளோம். எதிர்காலத்தில் அதிகளவான பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

இந்திய நாடாளுமன்றத்தில், பெண்களின் பிரதிநிதித்துவம் 33 சதவீதமாகக் காணப்படுகின்றது. அதேபோல், இலங்கையிலும் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படவேண்டும்.

பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு எதிராக, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டம் நடத்துவதை ஏற்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பல போராட்டங்ளை நாடாளுமன்றில் நடத்தியிருக்கிறது. பெண்களுக்கு சமத்துவமளித்து, பிரதிநிதித்துவத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு த.தே.கூ ஆதரவளிக்கிறது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts