யாழில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் கருத்தறியும் செயலமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபரின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 15 ஆம் திகதி மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை இந்த கருத்தறியும் செயலமர்வு இடமபெறவுள்ளது.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்து மூல சமர்ப்பணங்களை பெறுவது அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைக்குழுவின் செயற்பாடாகும்.

உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் கருத்துக்களை அறிந்து இந்த குழு அமைச்சரவைக்கு அறிக்கையொன்றினையும், சிபார்சுகளையும் தயாரித்து அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான அமைச்சரவை உப குழுவிற்கு சமர்பிக்கும்.

பொது மக்கள் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு 0112437676, 0773868563 என்ற தொலைபேசி இலக்கங்களுடனும், 0112328780 என்ற தொலைநகல் இலக்கதிலும், constitutionalreforms@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் yourconstitution.lk என்ற வலைத்தளம் மூலமும், தபால் மூலமாக தவிசாளர், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் குழு செயலகம், விசும்பாய, ஸ்ரேபிள்ஸ் வீதி, கொழும்பு -02 என்ற முகவரிக்கும் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அத்துடன், பொது மக்களை இந்த செயலமர்விற்கு ஒத்துழைப்பு தருமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Posts