தேமுதிக தலைவர் விஜயகாந்த் அண்மையில் வெளியிடுகிற அறிக்கைகளில் எம்.ஜி.ஆர். பாடல்களை உதாரணம் காட்டியே முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த், அன்றாடம் ஏதேனும் ஒரு பிரச்சனையை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இதில் கடந்த சில நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சிக்கும் அறிக்கைகளும் அடக்கம்.
ஜெயலலிதாவை விமர்சிக்கும் அறிக்கைகளின் இறுதியில் தவறாமல் ஒரு எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி அதுபோல் இருக்கக் கூடாது என்ற ‘பஞ்ச்’ அட்வைஸும் இடம்பெற்றுவிடுகிறது.
உச்சநீதிமன்றம் கெயில் எரிவாயு குழாய்களைப் பதிக்க அனுமதி கோரி தீர்ப்பளித்தது தொடர்பாக கடந்த 6-ந் தேதியன்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.. அதே பாணியில் உணவை உற்பத்தி செய்யும் உழவர்களையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏமாற்றி வருவதைப் பார்க்கும் போது ‘போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே’ என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது என சாடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று “அவசர கோலத்தில் சாலைகள்” போடப்படுவதை விமர்சித்து வெளியிடப்பட்ட விஜயகாந்த் அறிக்கையில் மறக்காமல் எம்.ஜி.ஆர். பாடல் மூலமே குட்டு வைக்கப்பட்டுள்ளது. அதில் “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா” என்ற எம்.ஜி.ஆரின் பாடலில் வருகிற ‘விதவிதமாக பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா’ என்ற வைரவரிகள் இந்த அரசுக்குத்தான் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என விமர்சித்திருக்கிறார்.
இன்று, திருவண்ணாமலை தீர்த்தவாரி நெரிசல் விபத்து, கும்பகோணம் மகாமகம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலும் கூட, ”உலகம் பிறந்தது எனக்காக” என்ற சுயநலம் இல்லாமல் உலகம் பிறந்தது ஏழை எளிய மக்களுக்காக அவர்களுக்காகத்தான் இந்த ஆட்சி அதிகாரம் என்பதை மறந்துவிட வேண்டாம் என எச்சரித்திருக்கிறார் விஜயகாந்த்.
(அப்ப “உலகம் பிறந்தது எனக்காக” என எம்.ஜி.ஆர். சுயநலத்துடன் பாடினார் என்கிறாரா விஜயகாந்த் என்று அதிமுகவினர் ரிவீட் அடித்தாலும் ஆச்சரியமில்லை)