இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை 5விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி நேற்று புனேவில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்ய சொந்தமண்ணில் சாதிப்பதற்கு களமிறங்கியது இந்தியா.
அறிமுக வேகப்பந்து வீச்சாளரான கசூன் ராஜித மற்றும் திஸரபெரேரா ஆகியோர் பந்து வீச்சில் இந்தியாவை திணறடித்தனர்.
முதல் ஓவரை வீசிய கசூன் ராஜித ஆரம்ப அதிரடித்துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா இரண்டாவது பந்தில் ஓட்டமெடுக்காது ஆட்டமிழக்க தொடர்ந்து ரஹானே(4) அரங்கு திரும்பினார். அந்த அதிர்ச்சியிலிருந்து இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மீள்வதற்குள் தவான்(9), ரெய்னா(20) யுவராஜ்(10) டோனி(2), பண்டியா(2), ஜடேஜா(6) என அடுத்தடுத்து அரங்கு திரும்பினர். சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் மட்டுமே 31 ஓட்டங்களை எடுத்தார். இறுதியில் இந்தியா 18.5 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப்பெற்றது.
இலங்கை சார்பில் ராஜித, சானக்க ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு சமீர இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கையின் விக்கெட்டுக்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வீழ்த்தப்பட்டாலும் 18ஆவது ஒவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று இலகுவெற்றி பெற்றது இலங்கை.
அணித்தலைவர் தினேஷ் சந்திமல் 35 ஓட்டங்களையும் கபுகெதர 25 ஓட்டங்களையும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
ஆட்டநாயகனாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ராஜித தெரிவானார்.
இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.